தேசியம் என்ற குறியீட்டை தூக்கி வீசி எறிந்தவர்கள் யாரிடம் வாக்கு கேட்கிறார்கள்? பனங்காட்டான்

1989ம் ஆண்டு மற்றும் 1994ம் ஆண்டு பொதுத்தேர்தல்களில் திருமலையில் படுதோல்வியடைந்த இரா.சம்பந்தனை 2001ம் ஆண்டு கூட்டமைப்பில்
இழுத்து வந்து திருமலையில் வேட்பாளராக்கி வெற்றி பெற வைத்திருக்காது விட்டால் அவர் என்றோ அரசியலில் ஓய்வு பெற்றிருப்பார் என்பதை அவரது சகபாடிகளும் பங்காளித் தோழர்களும் மறந்து விட்டார்கள் போலும்!

கொரோனா அச்சுறுத்தல், ஊரடங்குச் சட்டம், நடமாட்டத்தடை, அத்தியாவசிய பொதுவிடுமுறை, கட்சிகளுக்குள் தெரிவுப் போட்டி என்பவற்றுக்கு மத்தியில் இலங்கையின் பொதுத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இந்த மாதம் 19ம் திகதி மதியத்துடன் ஒருவாறு முற்றுப்பெற்றுவிட்டது.

வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களை 14 நாட்களுக்கு சுயதனிமைப்படுத்தலுடன், தலைமறைவானவர்களை இராணுவம் தேடிப்பிடித்து தூக்கிச் செல்லும் சூழ்நிலையிலும் வேட்புமனுத்தாக்கல் தடையாகவில்லை.

அரச சிவில் நிர்வாகமே இராணுவ மயமாகிவிட்ட நிலையில் கொரோனா தடுப்பு செயலணியின் தலைமை அதிகாரியாக சவேந்திர சில்வாவை ஜனாதிபதி கோதபாய நியமித்துள்ளார். அமெரிக்காவின் பயணத்தடைக்குள்ளாகியிருக்கும் இலங்கையின் இராணுவத் தளபதியான அதே சவேந்திர சில்வாதான்.

தேர்தல் பரப்புரைக் காலத்தில் நாடு முழுமையாக இராணுவக் கட்டுப்பாட்டில் வந்துவிடுமென துணிந்து கூறலாம்.

முன்னர் அறிவிக்கப்பட்டது போன்று ஏப்ரல் 25ம் திகதி தேர்தல் இடம்பெறாதென்று தேர்தல் ஆணையர் மகிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். அனேகமாக அனைத்துக் கட்சிகளும் இந்த கால நீடிப்பை வேண்டி வந்தன.

எப்போது தேர்தல் நடைபெறுமென்பதை கொரோனாதான் தீர்மானிக்க வேண்டுமென்று மகிந்த தேசப்பிரிய தெரிவித்திருப்பதை மிகவும் ஆழமாக கவனத்தில் எடுக்க வேண்டும்.

கொரோன பரவல் அடுத்த நான்கைந்து மாதங்களுக்கு நீடிக்குமானால், அனேகமாக ஆகஸ்ட் மாதம்வரை தேர்தலுக்கான சாத்தியம் இல்லை. இந்த நிலையில், 2015ல் தெரிவான நல்லாட்சி அரசாங்கத்தின் முழுமையான ஆயுட்காலம் (5 வருடம்) ஆகஸ்ட் மாதத்தில் முடிந்துவிடும்.

இவ்வாறான சூழ்நிலையில், இந்த மாதம் 19ம் திகதிவரை ஏற்கப்பட்ட தேர்தல் வேட்புமனுக்கள் காலம் கடந்த பின்னர் செல்லுபடியாகுமா? ஆறு மாதங்களுக்கு மேலாக நாடாளுமன்றத்தை முடக்கி வைக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டா என்ற பல பிரச்சனைகள் மேலெழும்.

ஜனாதிபதி தமக்குள்ள அதிகாரத்தின்கீழ் நாலரை ஆண்டு முடிவின்போது நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டபடியால், அதனை மீண்டும் கூட்ட அரசியலமைப்பு இடம்கொடுக்குமா என்ற மறுதரப்புக் கேள்வியும் எழுகிறது.

இப்படியான நெருக்கடிகள் கோதபாய விரும்பும் எதேச்சாதிகார ஆட்சிக்கு வாய்ப்பாக அமையக்கூடும். எத்தகைய சூழ்நிலையிலும் மே மாத முற்பகுதியில் தேர்தலை நடத்தினால் அது தமது கட்சிக்கு சாதகமாக அமையுமென அவர் எண்ணுவாராயின், இராணுவப் பாதுகாப்புடன் தேர்தலை நடத்தி நாடாளுமன்ற அதிகாரத்தை இலகுவாக கைப்பற்ற முயற்சிக்கலாமென பரவலான அபிப்பிராயம் அரசியல் நோக்கர்களிடம் உண்டு.

இதனால் அனைத்துக் கட்சிகளும் தங்கள் பரப்புரைகளை ஒரு நாள் கூட தாமதிக்காது ஆரம்பிப்பார்கள் என்பது நிதர்சனம்.

வேட்பாளர் பட்டியல் தாக்கலான மையங்களில் கொழும்பு மாவட்டமே அதிகமானவர்களைக் கொண்டுள்ளது. 17 அரசியல் கட்சிகளும், 23 சுயஇச்சைக் குழுக்களும் இங்கு போட்டியிடுகின்றன. ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும், அவரிடமிருந்து பிரிந்து சென்ற ஜனநாயக மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் கொழும்பில் எதிரெதிராகப் போட்டியிடுவது ஒரு வரலாற்று நிகழ்வு.

மகிந்தவின் பொதுஜனப் பெரமுனவில் அவரது பங்காளிக் கட்சிகளின் பல தலைவர்களும் கொழும்பிலேயே போட்டியிடுகின்றனர்.

இதற்கு அடுத்ததாக, யாழ்ப்பாண தேர்தல் மாவட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. கிளிநொச்சியை உள்ளடக்கிய இந்த மாவட்டம் தேர்தலில் ஏழு உறுப்பினர்களைத் தெரிவு செய்ய வேண்டும். இங்கு ஏற்கனவே எம்.பிக்களாகவிருந்த மாவை சேனாதிராஜா, சிறிதரன், சரவணபவன், சுமந்திரன், சித்தார்த்தன் ஆகிய கூட்டமைப்பினரோடு ஈ.பி.டி.பி யின் டக்ளஸ் தேவானந்தா, ஐக்கிய தேசிய கட்சியின் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் மீண்டும் போட்டியிடுகின்றனர்.

ஏழு பேரைத் தெரிவதற்கான இந்தப் போட்டியில் ஏற்கனவே எம்.பிகளாகவிருந்த ஏழு பேரில் யார் யார் தோல்வியடையப் போகிறார்கள்? இங்கு மொத்தம் 330 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். நீதியரசர் விக்னேஸ்வரனின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தமிழ் தேசிய முன்னணி என்பவை கூட்டணியுடன் நேரடியாக மோதும் தமிழ் கட்சிகள்.

மகிந்த ராஜபக்சவின் பொதுஜன பெரமுன, சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளும் யாழ்ப்பாணத்தில் வேட்பாளர்களை இறக்கியுள்ளன.

திருமலை மாவட்டத்தில் 13 அரசியல் கட்சிகளும், 14 சுயஇச்சை அணிகளும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளன. இங்கு தெரிவு செய்யப்பட வேண்டியவர்களின் எண்ணிக்கை நான்கு மட்டுமே.

இனப்பரம்பலைப் பொறுத்தளவில் சிங்களவர்களும் முஸ்லிம்களும் இணைந்து இங்கு பெரும்பான்மையாக மாற்றப்பட்டுள்ளனர். கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், அவரால் கனடாவிலிருந்து இறக்கப்பட்ட சண்முகம் குகதாசனும் இங்கு போட்டியிடுகின்றனர்.

இவ்விடத்தில் 2001ம் ஆண்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எவ்வாறு உருவானது அல்லது உருவாக்கப்பட்டது என்ற வரலாற்றை மேலோட்டமாக சற்றுப் பார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தை தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை சர்வதேசத்துக்கு எடுத்துச் சொல்வதற்கான அரங்காகப் பயன்படுத்த வேண்டுமென்ற நோக்கத்துக்காகவே தமிழ் தேசிய தலைமையான விடுதலைப் புலிகளால் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. ஆங்கில விக்கிபீடியா கூட்டமைப்பை விடுதலைப் புலிகளின் பொலிடிகல் புறொக்சி (Pழடவைiஉயட Pசழஒல) என்று குறிப்பிடுகிறது.

அதாவது, ஒரு செயலைச் செய்ய தமது சார்பாக ஒருவருக்கு வழங்கும் அதிகாரம் (சார்பாண்மை) என்பது புறொக்சி என்பதன் அர்த்தம். தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கியவர்கள் விடுதலைப் புலிகள் என்பதை இது உறுதி செய்கிறது.

அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ், ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி ஆகிய நான்கு அணிகளையும் சேர்த்தே கூட்டமைப்பை விடுதலைப் புலிகள் உருவாக்கினர். தமிழரசுக் கட்சியும், புளொட்டும் அப்போது நேரடியாக இக்கூட்டில் அங்கம் வகிக்கவில்லையென்பதை கவனத்தில் கொள்ளலாம்.

தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் சின்னமான உதயசூரியன் 2001ம் ஆண்டுத் தேர்தலில் கூட்டமைப்பின் சின்னமாகப் பயன்படுத்தப்பட்டது. அவ்வேளை கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத்தலைவராக சம்பந்தனை விடுதலைப் புலிகள் நியமனம் செய்தனர். அப்போது சம்பந்தன் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கவில்லை.

2000ம் ஆண்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தமிழரசுக் கட்சியிலிருந்தோ தமிழர் ஐக்கிய கூட்டணியிலிருந்தோ திருமலையில் எவரும் வெற்றி பெறவில்லை. சம்பந்தன் அத்தேர்தலில் இங்கு போட்டியிட்டு தோல்வியடைந்திருந்தார்.

2001ல் நடைபெற்ற பொதுத்தேர்தலே சம்பந்தனை மீண்டும் வெற்றிபெறச் செய்து அவரை  நாடாளுமன்ற உறுபப்pனராக்கியது. இதற்கு மூலமாக அமைந்தது விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பில் அவர் போட்டியிட்டது. இல்லையேல், 2000ம் ஆண்டுத் தோல்வியுடன் சம்பந்தன் அரசியலுக்கு முழுக்குப் போட்டிருப்பார்.

இதற்கு முன்னைய இரண்டு பொதுத்தேர்தல்களில் திருமலையில் சம்பந்தன் தோல்வியடைந்தது பற்றியும் பின்னர் எவ்வாறு ஒருவரது மரணம் இவருக்கு வாய்ப்பளித்தது என்பது பற்றியும் விரிவஞ்சி இங்கு குறிப்பிடவில்லை. தேவை ஏற்படுமாயின் இன்னொரு பத்தியில் சுட்டலாம்.

மீண்டும் கூட்டமைப்பின் ஆரம்பத்தை நோக்கலாம். 2001ல் கூட்டமைப்பு உருவான சில மாதங்களில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் முக்கியஸ்தர்களில் ஒருவரான வீரசிங்கம் ஆனந்தசங்கரி கூட்டமைப்பிலிருந்து விலகியதோடு உதயசூரியன் சின்னத்தை பயன்படுத்துவதையும் தடுத்தார். இதனால் 2004ம் ஆண்டுத் தேர்தலில் சம்பந்தன் தலைமையிலான தமிழரசுக் கட்சியை கூட்டமைப்பு உள்வாங்கியதுடன், தமிழரசின் வீடு சின்னத்தையும் கூட்டமைப்பின் சின்னமாகப் பயன்படுத்தியது.

அந்த நாட்களில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதாந்தம் வன்னி சென்று தமிழ் தேசிய தலைமைப்பீடத்துடன் அரசியல் நிலைமைகளை ஆராய்ந்து அதன் வழி செயற்பட்டது வரலாற்றுப் பதிவிலுள்ளது. 2004ம் ஆண்டுத் தேர்தலிலேயே கூட்டமைப்பு தமிழர் தாயகத்தில் 22 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றதும் இங்கு குறிப்பிடப்பட வேண்டியது.

2009ல் முள்ளிவாய்க்காலில் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டதன் பின்னர் கூட்டமைப்பு முன்னுக்குப் பின் முரணான போக்கை கடைப்பிடித்ததுடன், தமிழ் தேசிய சிந்தனையை ஏற்காதவர்களையும், துரோகமிழைத்தவர்களையும் உள்வாங்கியதால் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழக்கத் தொடங்கியது.

தாயகம், தேசியம், தன்னாட்சி என்ற கொள்கைகளை கைவிட்டு, ஒன்றுபட்ட ஒருநாட்டுக்குள் தீர்வு என்றும், தனிநாட்டுக் கொள்கையை தமிழ் தமிழ் மக்கள் கைவிட்டு விட்டனரென்றும் கூறி மக்கள் எதிர்ப்பைச் சம்பாதித்தது.

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தையே தமது அறாத்தொடர் கொள்கையாகக் கொண்ட தமிழ் காங்கிரசை வெளியேற்றியும் மகிழ்ச்சிகொண்டது.

வடமாகாண சபைக்கென வருந்தி அழைத்துக் கொண்டுவரப்பட்ட நீதிபதி விக்னேஸ்வரன் தலைமையிலான இன்னோரணி கூட்டமைப்பின் கொள்கைப் புரட்டலால் விலகிச் சென்றது.

2009க்குப் பின்னர் விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்று கூறி, அவர்களை அழித்ததற்காக மகிந்த அரசுக்கு நன்றி கூறிய சம்பந்தன் இப்போது கூட்டமைப்புக்கு வாக்குத் தருமாறு மக்கள் முன் வந்து நிற்கிறார்.

நாடாளுமன்றத்துக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை கேட்கும் கோதபாயவுக்கும், தங்களுக்கே பெரும்பான்மைப் பலம் தருமாறு தமிழ் மக்களிடம் கேட்கும் சம்பந்தனுக்கும் ஏதாவது வித்தியாசம் தெரிகிறதா?


No comments