ஆரம்பமானது யாழ்.நகரில் பட சூட்டிங்?


கொரோனாவை கட்டுப்படுத்த கெஞ்சி கேட்டபோது புறந்தள்ளி தரப்புக்கள் இப்போது படம் காண்பிக்க களமிறங்கியுள்ளன.

அவ்வகையில் யாழ்ப்பாணம் மாநகர எல்லையில் பொதுமக்கள் கூடும் இடங்களில் கிருமித் தொற்று நீக்கி விசிறும் பணி யாழ்ப்பாணம் பிரதேச செயலர் எஸ்.சுதர்சன் தலைமையில் ஆரம்பித்துவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு அதிரடிப் படையினரின் கொழும்பிலிருந்து வருகை தந்த அணியினர், மாநகர ஆணையாளர் கவிஞர் ஜெயசீலன், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், யாழ்ப்பாணம் பிரதேச செயலக கிராம சேவையாளர்கள் உள்ளிட்டோர் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரியாலையில் சுவிஸ் மத போதகரின் ஆராதனை நிகழ்வில் கலந்துக்கொண்டவர்கள், பாதிக்கப்பட்டதை இணைய ஊடகங்கள் முதலில் வெளிக்கொணர்ந்தன. அதனை தொடர்ந்து தொலைக்காட்சி ஊடகங்கள் வைத்தியர் கேதீஸ்வரன் வீடு தேடி சென்று பேட்டி எடுத்து விழிப்புணர்வை செய்தன.

ஆனால் இன்னொருபுறம் சர்ச்சைக்குரிய தேவாலயத்திற்கு சென்றவர்களை தனிமைப்படுத்த ஊடகங்கள் பல தடவை கோரிய போதும் அதிகாரிகள் தமக்குதாமே அனைத்தும் தெரியும் மனோநிலையில் அது அவசியமில்லையென்றனர்.

மாநகர ஆணையாளர் முதல் சுகாதார வைத்திய அதிகாரி முதல் அமைதி காத்திருந்தனர்.

இன்று ஆராதனையில் பங்கெடுத்தவர்களால் அது பல்கி பெருகி முற்றியுள்ள நிலையில் பலாலிக்கு அனுப்பவும் மருந்தடிக்கவும் கும்பல் களமிறங்கியுள்ளது.

ஆனாலும் அது நிச்சயமாக ஊடகங்களிற்கான படப்பிடிப்பு மட்டுமே என்பது அப்பட்டமாக தெரிகின்றது.

No comments