தம்பி கண்ட தேசமே வேண்டும்?


தம்பி பிரபாகரன் கனவு கண்ட தேசமே வேண்டுமென பதிலளித்துள்ளார் சி.வி.விக்கினேஸ்வரன்.
தனது கேள்வி பதிலில்  எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் கிறிஸ்தவ ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க நீங்கள் மறுத்துள்ளதாகவும் அதனால் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியில் உடைவு ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றனவே. இது உண்மையா?

பதில்:- இது முற்றிலும் தவறான செய்தி. ஒன்றை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். இலங்கையில் தமிழ் மக்களை மத ரீதியாகவோ அல்லது சாதி அடிப்படையிலோ பிரித்து வேறுபடுத்தி அரசியல் செய்ய முடியாது. அவ்வாறு என்றும் வெளிப்படையாக நடைபெற்றிருந்ததும் இல்லை. அத்தகைய வெளிப்படையான அரசியலை மேற்கொள்ளும் எவரும் வெற்றி பெறப் போவதுமில்லை. வடக்கிலும் சரி கிழக்கிலும் சரி தமிழ் மக்கள் சாதி, சமய அடிப்படையில் வாக்குகளை அளிப்பது இல்லை.

சுதந்திரத்துக்கு பின்னர் விடுதலை வேண்டி எமது தலைவர்கள் முன்னெடுத்த போராட்டம் என்றுமே சாதி, சமயம் என்ற அடிப்படையில் அமைந்திருக்கவில்லை. அப்படி இருந்திருந்தால், திரு.எஸ்.ஜே.வி செல்வநாயகம் அவர்கள் தமிழ் மக்களுக்கு தந்தை ஆகி இருந்திருக்க முடியாது. தமிழ் மக்களின் விடுதலைக்காக சாதி, மத வேறுபாடு இன்றி பாடுபட்ட ஒரு சிறந்த தலைவர் தந்தை செல்வா.  பின்னர் தம்பி பிரபாகரன் முன்னெடுத்த போராட்டம் சாதி, சமயம் ஆகியவற்றைக் கடந்து இன மற்றும் சமூக விடுதலையை நோக்கியதாக அமைந்திருந்தது. தம்பி பிரபாகரனின் காலத்தில் சமூக ரீதியான ஏற்றத்தாழ்வுகள், பெண் அடிமைத்தனம் ஆகியவை அற்ற ஒரு உன்னத நிலையை நோக்கி எந்தளவுக்கு எமது சமூகம் முன்னேற்றம் அடைந்து சென்றுகொண்டிருந்தது என்பதை கடந்த 10 ஆண்டுகளில் பலரும் கூற நான் வியப்புடன் கேட்டிருக்கின்றேன்.

நான் ஒரு சைவத் தமிழன் என்பது உண்மையே. இது என்னுடைய அடையாளமும் நம்பிக்கையும். அதற்காக நான் எந்த ஒரு மதத்தையும்  வெறுப்பவன் அல்லன். ஆனால் நான் என் தனித்துவத்தைப் பிரதிபலிக்கத் தவறுவதும் இல்லை. உண்மையில் பல கிறிஸ்வர்கள் என் தனித்துவத்தை ஏற்கின்றார்கள். அவர்கள் எனது மனதை ஊடுறுவிப் பார்க்கின்றார்களே அன்றி வெளிக்குறியீடுகளைப் பார்த்து என்னை வெறுப்பது இல்லை. அது அரசியல்வாதிகளின் பாணி. 

இதுபற்றி சில தினங்களுக்கு முன்னர் விளக்கமாக கூறி இருந்தேன். மன்னார் மாவட்டத்தின் முன்னாள் பேராயர் வணக்கத்துக்குரிய ராயப்பு ஜோசப் எனது நல்ல நண்பர். தற்போதைய யாழ் மாவட்ட பேராயர் ஜஸ்டின் ஞானபிரகாசத்தை சில நாட்களுக்கு முன்னர் தான் சந்தித்துக் கதைத்தேன். அதேபோல, பல பேராயர்கள் எனது நண்பர்கள். நான் கிழக்கு மாகாணத்துக்கு செல்லுகின்றபோதெல்லாம் கிறிஸ்தவ மடங்களில் தங்குவது தான் வழமை. நேற்று முன்தினம் மட்டக்களப்புக்கு சென்றபோது கூட பேராயர் பொன்னையா ஆண்டகையை நட்பு நிமித்தம் சந்தித்திருந்தேன். பாதிரியார்கள் எமது போராட்டத்துக்கு எந்தளவு தியாகங்களைச் செய்திருக்கின்றார்கள் என்பதையும் எந்தளவுக்கு தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு அவர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றார்கள் என்பதையும் நான் நன்கு அறிவேன். ஆகவே, கிறிஸ்தவர் ஒருவரை நான் வேட்பாளராக நியமிப்பதற்கு மறுத்ததாக வெளியான செய்திகளில் எந்த உண்மையும் இல்லை.

நான் தமிழ் மக்கள் கூட்டணியை தொடங்கியபோது நான் ஏற்கனவே அடையாளம் கண்டிருந்த பல சிறந்த செயற்பட்டாளர்களை உள்வாங்குவதற்கு முயற்சித்தேன். அவர்களில் சிலர் கிறிஸ்தவர்களாக இருந்தனர். அவர்களை கட்சிக்குள் உள்வாங்குவதற்காக எனது கிறிஸ்தவ தொடர்புகள் மூலம் முயற்சி செய்தேன். ஆனால், பலர் தமது தனிப்பட்ட காரணங்களினால், கட்சியில் உடனடியாக இணையவில்லை. ஆனால்  மாகாணசபைத் தேர்தல் வரும்போது போட்டியிடுவதாகக் கூறி இருந்தார்கள். அந்த அடிப்படையில்த் தான், பல்வேறு மாவட்டங்களிலும் இம்முறை பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவுசெய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். இவர்களில் சிலர் கிறிஸ்தவர்கள். ஆனால், கிறிஸ்தவர்கள் என்ற அடையாளத்துக்கு அப்பால் அவர்கள் ஒட்டுமொத்த தமிழ் மக்களினாலும் அவர்களின் இன  மற்றும் சமூக செயற்பாடுகளினாலும் பெரிதும் மதிக்கப்படுபவர்கள். அவர் கிறிஸ்தவர்- இவர் இந்து- அவர் அந்த சாதி -இவர் இந்த சாதி என்பது வேட்பாளர் தெரிவுகளுக்கான எமது வரையறைகள் அல்ல.   எவர் தமிழ் தேசியத்துக்கு பங்களிப்பு செய்துள்ளனரோ எவர் தமிழ் தேசியத்துக்கு பங்களிப்பு செய்ய முடியும் என்று எம்மால் அடையாளம்  காண முடியுமோ அவர்களையே நாம் தெரிவுசெய்து வருகின்றோம்.

இதேவேளை, முன்னர் எப்போதும் இல்லாத அளவுக்கு அண்மை காலமாக மத ரீதியான வேறுபாடுகளும், கருத்து வினைப்பாடுகளும், செயற்பாடுகளும்  தலைதூக்க ஆரம்பித்துள்ளமையை நான் அவதானித்து வருகின்றேன். இதில் அரசியல்வாதிகளின் சுயநலத்தை நான் காண்கின்றேன். இது கவலைக்குரிய ஒரு விடயம். இது தமிழ் தேசிய வளர்ச்சிக்கு ஆரோக்கியமானது அல்ல. ஆகவே, பொதுமக்கள் இந்த சந்தர்ப்பதில் மிகவும் எச்சரிக்கையாகவும் விழிப்பாகவும் இருக்க வேண்டும் என்று அன்புடன் வேண்டுகோள் விடுக்கின்றேன். 



No comments