அரசை எதிர்த்து மட்டக்களப்பு முடக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் உலகை ஆக்கிரமித்து வரும் நிலையில் கொரோனா தாக்கிய நாடுகளில் இருந்த நாடு திரும்பியோரை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அழைத்து சென்று தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதை எதிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (12) (உள்ளிருப்பு போராட்டம்) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது.

கொரொனா தொற்றிலிருந்து எமது மாவட்டத்தினை பாதுகாப்போம் என்னும் தலைப்பில் நேற்று தமிழ் உணர்வாளர் அமைப்பு விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் இவ்வாறு ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது.

இந்த மாவட்டத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால், இந்த மாவட்டம் தனிமைப்படுத்தப்படும் நிலையேற்படும். இந்த அனர்த்ததில் இருந்து தமது மாவட்டத்தினை பாதுகாக்க தமது எதிர்ப்பினை வெளிப்படுத்த வருமாறு தமிழ் உணர்வாளர் அமைப்பு  அந்த அழைப்பில் தெரிவித்திருந்தது.

இந்த ஹர்த்தால் காரணமாக மட்டக்களப்பு மாவட்டம் முழுமையான ஸ்தம்பிதமடைந்து உள்ளது. ஹர்த்தால் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வர்த்தக நிலையங்கள் அடைக்கப்பட்டு பூரண ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.

பாடசாலைகள் இயங்குகின்ற போதிலும் மாணவர்களின் வரவு குறைவான நிலையிலேயே இருப்பதை காணமுடிகின்றதோடு, அரச அலுவலகங்கள் இயங்குகின்ற நிலையிலும் மக்களின் வரவு குறைவாக காணப்படுவதன் காரணமாக அரச அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.




No comments