சிங்களவர்களிற்கு மட்டும் வாக்களிக்க கோரும் பிக்குகள்?


நாடாளுமன்ற தேர்தலில் வடக்கிலும் சிங்கள வேட்பாளர்களுக்கு மட்டும் வாக்களியுங்கள் என பௌத்த துறவிகள் இனவாதத்தை கக்குவதாக வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

வன்னி தேர்தல் தொகுதியில் அண்மைக்காலங்களில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களின்போது பெரும்பான்மை கட்சிகளின் சார்பில் போட்டியிட்ட சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்களே நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டார்கள். 

இந்த நிலையில், தற்போது வடக்கில் பெரும்பான்மை சிங்கள மக்கள் வாழும் பிரதேசங்களில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் சிங்கள பௌத்த வேட்பாளருக்கு மட்டும் வாக்களிக்குமாறு பௌத்த துறவிகள் கோரி வருவதாக அறிய முடிகின்றது. பல்லின இனக்குழுமங்கள் வாழும் இலங்கைத்தீவில் அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் பெறுபேறுகள் பல செய்திகளை வெளிக்கொணர்ந்துள்ளன.

இலங்கையில் எண்ணிக்கையில் சிறுபான்மையாக வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழ்கின்ற வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் பொதுஜன பெரமுனவிற்கு குறைந்தளவிலான வாக்குகள் கிடைத்துள்ளன.

வவுனியா மாவட்டத்தில் இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் சிங்களவொருவரை வெற்றி பெற வைக்கவே இத்தகைய பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றது.

கடந்த தேர்தலில் தேசிய கட்சிகள் சார்பில் தமிழர்கள் மற்றும் முஸ்லீம்கள் களமிறக்கப்பட்டதெனவும் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
இதனிடையே கூட்டமைப்பு சார்பில் வன்னியில் பா.சத்தியலிங்கமும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments