மத ஸ்தானங்களில் பிரச்சார தடை?



மத ஸ்தானங்களில் தேர்தல் பிரசாரக்கூட்டத்தை நடத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டாம் என சர்வமதத் தலைவர்களிடம், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் மதத்தலைவர்களை நேரில் சந்தித்து விளக்கமளிக்க திட்டமிட்டுள்ள தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், முதற்கட்டமாக கண்டியில் உள்ள அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களை இன்று (03) சந்தித்து தெளிவுபடுத்தினர்.

அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய கூறியதாவது,

“மதஸ்தானங்களில் தேர்தல் பிரசாரக்கூட்டத்தை நடத்துவதற்கும், வேட்பாளரை ஊக்குவிக்கும் வகையிலான செயற்பாடுகளுக்கும் 1981 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின் 79ஆவது சரத்தின் பிரகாரம் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மேற்படி நடைமுறையை பின்பற்றி – பாதுகாக்கும் நோக்கில் அது சம்பந்தமாக சர்வமதத் தலைவர்களை சந்தித்து தெளிவுபடுத்த திட்டமிட்டோம். இதன்படி இன்று மகாநாயக்க தேரர்களை சந்தித்தோம். அடுத்துவரும் நாட்களில் இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகிய மதங்களின் தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளோம்.


அதன்பின்னர் எமது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவாகும். மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி ஊடாக அனைத்து மதஸ்தானங்களின் பொறுப்பாளர்களுக்கும், மதத்தலைவர்களுக்கும் இது பற்றி அறிவிக்கப்படும்.

இந்த நடவடிக்கை மூலம் மதத்தலைவர்களுக்கு அரசியல் உரிமை இல்லை என அர்த்தப்படாது. அவர்கள் பிரசாரக்கூட்டத்தில் கூட உரையாற்றலாம். ஆனால், ஆன்மீக நிலையத்துக்குள் கூட்டம் நடத்தவோ, வழிபாடுகளின் போது வேட்பாளரை ஊக்குவிக்கும் வகையிலான செயற்பாடுகளையோ முன்னெடுக்க முடியாது.

அத்துடன், மதத்தலைவர்ளை சந்தித்து அரசியல்வாதிகள் ஆசிபெறலாம். ஆனால், அந்த வளாகத்துக்குள் ஊடகவியலாளர் மாநாட்டை நடத்த முடியாது.” – என்றார்.

No comments