கூட்டமைப்பிடம் போகவில்லை:மறுக்கிறார் சுரேன்?


எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தம்முடன் இணைந்து போட்டியிடுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்திருப்பதாக வெளியான செய்திகளை, வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் மறுத்துள்ளார்.

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்தரங்குகள், கலந்துரையாடல்களில் பங்கு பற்ற எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தமிழ் அரசியலின் நிலைமை குறித்து கவனிப்பதற்காக அந்த கூட்டங்களில் நான் பங்குபற்றினேன். இதையடுத்தே, நாள் கூட்டமைப்பில் இணைந்து கொள்ளப் போவதாக வதந்திகள் பரவின. ஆனால் அது முற்றிலும் பொய். கூட்டமைப்பு என்னை அணுகினால், அது விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பொறுத்ததாகவே இருக்கும். ஏனென்றால் மக்களுக்கு சேவை செய்வதே எனது ஒரே நோக்கம்.

நாட்டின் மிகவலுவான தமிழ் அரசியல் கட்சி என்பதால், புதிய தமிழ் அரசியல் பிரிவுகளும், கூட்டணிகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மிஞ்ச முடியாது.

சில கட்சி உறுப்பினர்களின் சித்தாந்தங்கள் மற்றவர்களுடன் ஒத்துப்போகாததால் இந்த பிரிவுகள் உருவாக்கப்பட்டன.

போர், இந்திய இராணுவத்தின் தலையீடு மற்றும் இனப்பிரச்சினை தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிறையவே கடந்து வந்திருக்கிறது. தற்போது, அதன் ஒரே இலக்காக இருப்பது ஒற்றுமையே ஆகும்” என்றும் சுரேன் இராகவன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே சுரேன் இராகவனை தேர்தல் அரசியல் ஊடாக களமிறக்க முற்படுவதாக தெரிவித்து கடுமையான விமர்சனங்களை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments