அரியாலை மக்களை சுய தனிமைப்படுத்தலிற்கு ஆலோசனை?யாழ்.செம்மணி - இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவர்களை முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறும், கொரோனா தொற்று தொடர்பான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலையில் தம்மை பரிசோதனைக்குட்படுத்துமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர்  வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி மற்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாள் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் ஆகியோர் இந்த கோரிக்கையினை விடுத்திருக்கின்றனர்.

கடந்த 15ம் திகதி சுவிஸ் நாட்டிலிருந்து வந்த மதபோதகர் ஒருவர் மதபோதனை நிகழ்வை நடாத்தியிருந்தார்.

இந்த போதனை நிகழ்வை நடாத்திய போதகர் திரும்பி சுவிஸ் சென்ற நிலையில் அங்கு அவர் கொரோனா நோயாளியாக அடையாளம் காணப்பட்டு சிகிச்சைக்குட்படுத்தப்பட்டிருக்கின்றார்ஆயினும் சில தரப்புக்கள் அவர் மாரடைப்பால் அனுமதிக்கப்பட்டதாக விளக்கமளித்துள்ளன.

இந்நிலையில் இந்த மதபோதனையில் கலந்து கொண்டிருந்தவர்களுள் ஒருவர் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஏனையோரை தம்மை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறும், சந்தேகங்கள் இருப்பின் உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலையில் பரிசோதனைக்குட்படுத்துமாறும் கோரப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த மதபோதகருடன் நெருக்கமாக பழகிய ஒருவரே கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. 

No comments