வலம்புரிக்குள் நடந்தது என்ன? - முருகமூர்த்தியில் நடந்தவை என்ன?

யாழ்ப்பாணத்தில் உள்ள பத்திரிகை ஒன்றின் அலுவலகத்துக்குள் "பாதிரியாரின் ஏற்பாட்டில்" குழு ஒன்று சென்று அட்டகாசத்தில் ஈடுபட்டதாக அப்பத்திரிகையால் சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டை மறுப்பதாக எழுவைதீவு உதவி பங்குத்தந்தை தெரிவித்துள்ளார்.

இதன்படி எழுவைதீவில் இருந்து 30 பேர் கொண்ட குழு ஒன்று அப்பத்திரிகை அலுவலகத்துக்கு சென்றது உண்மையே. ஆனால் இந்து மற்றும் கத்தோலிக்க மக்கள் இணைந்தே இவ்வாறு அங்கு சென்று அவர்களது பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில் நியாயம் கேட்டதை தாம் பின்னர் அறிந்து கொண்டாக அவர் தெரிவித்துள்ளார்.

அது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 9ம் திகதி குறித்த பத்திரிகையில் "எழுவைதீவு முருகமூர்த்தி வித்தியாலய மாணவர்களை எழுவைதீவு றோமன் கத்தோலிக்க பாசாலைக்கு மாற்றி முருகமூர்த்தியை முடக்கும் செயற்பாட்டை பாதிரியார் ஒருவர் முன்னெடுத்துள்ளார்" என்று பொய்யான செய்தி ஒன்றை பிரசுரித்திருந்தனர்.

அப்பத்திரிகையில் குறிப்பிட்டது போல் சம்பவம் எதுவும் குறித்த பாடசாலையில் இடம்பெறவில்லை. இவ்வாறன நிலையில் பொய்யான செய்தியை வெளியிட்டு ஒற்றுமையை குழப்ப முனைவதாக இந்து மற்றும் கத்தோலிக்க மக்கள் இணைந்த 30 பேர் கொண்டு குழு குறித்த பத்திரிகை அலுவலகத்துக்கு சென்றிருந்ததாக அறிகிறோம்.

அவர்கள் தாமாகவே சென்றனர், அவர்களை நாம் அனுப்பவில்லை. இந்நிலையில் அங்கு சென்ற குழு அமைதியான முறையில் குறித்த செய்தி தொடர்பில் வினவியதாகவும், குறித்த செய்தியை எழுதியவரை அடையாளம் காட்டுமாறு கோரியதாகவும் அறிய முடிந்தது. இதன்போது, உங்களை பாதிரியாரா அனுப்பினார் என்று பாதிரியார் ஒருவரது பெயரை குறிப்பிட்டு மற்றும் ஊர்காவற்துறை நகர சபை உறுப்பினர் அனுப்பினரா? என்றும் குறித்த அலுவலக ஊழியர்கள் கேள்வி எழுப்பியதாகவும் அதனை அங்கு சென்றிருந்த குழு மறுத்த போது அக்குழுவை ஹெல்மட்டினால் தாக்க முயன்றதால் முரண்பாடு ஏற்பட்டதாகவும் தாம் அறித்தோம். அங்கு நடந்தவை தொடர்பான ஆதாரங்களும் தமக்கு கிடைத்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

அத்துடன் இவ்வாறான நிலையிலேயே குறித்த பத்திரிகை, அங்கு நடந்து சம்பவத்தை சித்திரித்து பாதிரியாரின் ஏற்பாட்டில் குறித்த குழு அங்கு வந்து அட்டகாசம் புரிந்ததாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது - என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

இதேவேளை இது தொடர்பில் குறித்த 30 பேர் கொண்ட குழுவை சேர்ந்த சிலரிடம் வினவியபோது,

எழுவைதீவில் நாங்கள் மத வேறுபாடு இன்றி இந்து மற்றும் கிறிஸ்தவர்களாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறோம். இந்நிலையில் குறித்த பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில் நியாயம் கேட்கவே ஊர் மக்களாகிய நாம் இந்துக்கள் 15 பேர் அடங்கலாக 30 பேர் கொண்ட குழுவாக அன்றைய தினம் குறித்த பத்திரிகை அலுவலகத்துக்கு சென்றிருந்தோம்.

அலுவலகத்துக்குள் நுழைந்த சமயத்தில் அங்கிருந்த அலுவலகர் ஒருவர் தமது ஆசிரியர் இல்லை என தெரிவித்தார். பின்னர் அங்கு வந்த ஆசிரியர், பங்குத்தந்தை ஒருவரது பெயரை கூறி அவர் அனுப்பியா வந்தீர்கள் என்று அதட்டினார். எம்மை யாரும் அனுப்பவில்லை என்று தெரிவித்தோம். இதன்போது ஹெல்மட்டினால் அவர் எம்மை தாக்க முற்பட்டார்.

இதனால் நாங்களும் விடவில்லை அவர்களுடன் முரண்பட்டோம். இதுவே அங்கு நடந்தது. தவிர நாம் தாக்குதலை நடத்தும் நோக்கில் அங்கு செல்லவில்லை. தாக்குதல் நடத்தும் நோக்கம் இருந்திருந்தால் ஆயுதங்களுடன் சென்றிருப்போம். ஆனால் நாம் அவ்வாறு செய்யவில்லை. அங்கு நாம் எவ்வாறு நடந்து கொண்டோம் என்பது அவர்களது சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது.

இதன்போது அங்கு வந்த பொலிஸார் எம்மை விசாரித்தனர். நாம் தாக்குதல் நடத்தும் விதமாக செயற்பட்டிருந்தால் உடனடியாக எம்மை பொலிஸார் கைது செய்திருப்பார்கள். ஆனால் அப்படி எதுவும் இடம்பெறவில்லை. அங்கு ஆளுநரின் ஊடகச செயலாளரும் வருகைந்து சம்பவத்தை ஆராய்ந்தார். இதன்போது அவர் நடந்ததை புரிந்து கொண்டார். அவரிடம் எம்மை ஹெல்மட்டினால் தாக்க முயன்றதை தெரிவித்தோம். அதுகுறித்து ஊர்காவற்துறை பொலிஸில் முறையிடுமாறு அவர் எமக்கு கூறினார் - என்று தெரிவித்தனர்.

மேலும் நாம் குறித்த பத்திரிகை அலுவலகத்துக்கு சென்றது பங்குத் தந்தைக்கு கூட தெரியாது. இதுவே நடந்தது. ஆனால் மறுநாள் அங்கு நடந்த சம்பவம் திரிபுபடுத்தப்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டினர். அத்துடன் பத்திரிகையில் குறிப்பிட்டது போல் நாம் அட்டகாசம் புரிந்திருந்தால் எங்களை ஏன் பொலிஸார் கைது செய்யவில்லை என்று கேள்வியும் எழுப்பியிருந்தனர்.

இதேவேளை பாடசாலை விவகாரம் குறித்து விளக்கமளிக்கையில்,

எழுவைதீவு றோமன் கத்தோலிக்க பாடசாலையில் தரம் ஐந்து வரையிலும், எழுவைதீவு முருகமூர்த்தி வித்தியாலயத்தில் உயர்தரம் வரையிலும் கற்பிக்கப்படுகின்றது. முருகமூர்த்தி வித்தியாலயத்தில் மொத்தம் 89 பிள்ளைகள் கல்வி பயில்கின்றனர். ஐந்தாம் தரம் வரையில் 21 பிள்ளைகளுமே உள்ளனர். இவ்வாறான நிலையில் இரு பாடசாலைகளுக்கும் ஆசிரியர் பற்றாக்குறை காணப்பட்டது.

இதனால் கோட்டக்கல்வி பணிப்பாளர் மற்றும் வலயக்கல்வி பணிப்பாளர் ஆகியோர் இரு பாடசாலைகளின் மாணவர்களது பெற்றோர்களுடனும் கலந்துரையாடினர். இந்தக் கலந்துரையாடலின் போது ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில் முருகமூர்த்தி வித்தியாலயத்தில் ஆறாம் தரம் முதல் உயர்தரம் வரையில் கற்பிப்பது என்றும், அங்கு ஐந்தாம் தரம் வரையில் பயிலும் மாணவர்களை றோமன் கத்தோலிக்க பாடசாலைக்கு மாற்றுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது - எனத் தெரிவித்தனர்.

இந்த நடவடிக்கையில் எந்தவொரு பாதிரியார்களும் தொடர்புபடவில்லை. பெற்றோரது விருப்பத்துடன் கல்வியை முன்னேற்ற எடுத்த நடவடிக்கையை ஆராயாமல் திரிபுபடுத்தியுள்ளனர். இதனை சகலரும் புரிந்து கொள்ள வேண்டும்.

குறித்த பத்திரிகை அலுவலகத்தில் நடந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் அரசியல்வாதிகள், மதத் தலைவர்கள் எமது நியாயத்தை அறியாமல், அலுவலகத்தில் என்ன நடந்தது என்ற இரு தரப்பு நியாயங்களை ஆராயாமல் கண்டனம் வெளியிடுவதால் கவலையடைகிறோம் என்றும் குறித்த 30 பேர் கொண்ட குழுவை சேர்ந்தோர் குறிப்பிட்டனர்.

இதேவேளை உண்மைக்கு புறம்பான தகவலை வெளியிட்டு எழுவைதீவுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளதாக நேற்று முன் தினம் (24) ஆளுநரிடம் எழுவைதீவு மக்கள் சார்பில் 283 பேர் கையெழுத்திட்ட மனு ஒன்றை கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments