ஜனாதிபதிகளும் கதைத்தனர்: ரஞ்சன்

நாடாளுமன்றத்தில் பல்வேறு குரல் பதிவுகளை சமர்பித்துள்ளேன். அவற்றில் இரண்டு முன்னாள் ஜனாதிபதிகளின் குரல் பதிவுகளும், அமைச்சர்கள் மற்றும் அவர்களது மனைவியார்களின் குரல் பதிவுகளும் உள்ளடங்கியுள்ளன என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டார்.

திருடர்களைப் பிடிப்பதற்காகத் தாம் செய்த இந்தச் செயற்பாட்டினால் தனக்கு விலங்கிடப்பட்டுள்ளது எனவும், ஆனால் திருடர்கள் இன்று சுதந்திரமாக வெளியே உள்ளனர் எனவும் குறிப்பிட்ட அவர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் இதற்கான நியாயத்தைக் கேட்கிறார் எனவும் கூறினார்.

சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல் பதிவுகள் குறித்த விவகாரத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, அரசாங்க இராசாயன பகுப்பாய்வாளர் திணைக்கள அலுவலகத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

அவரால் பதிவு செய்யப்பட்ட, தொலைபேசி அழைப்பு ஒலிப்பதிவுகள் தொடர்பாக இடம்பெற்று வரும் விசாரணைகளுக்கமைய, குரல் மாதிரியை பெறுமாறு நீதிமன்றம் விடுத்த உத்தரவுக்கமைய அவர் அங்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் நீதிமன்றத்திலும் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

பலருடன் தொலைபேசியில் கலந்துரையாடிய உரையாடல்கள் அம்பலமாகிய நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, நீதித்துறைக்கு அழுத்தம் கொடுத்த குற்றச்சாட்டில் கடந்த தைத்திருநாளன்று கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

கடந்த ஜனவரி 15ஆம் திகதி நுகேகொட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, ஜனவரி 23ஆம் திகதி அவரை அரச இரசாயன பகுப்பாய்வாளரிடம் முன்னிலைப்படுத்துமாறும் உத்தரவிடப்பட்டது.

எனினும், அது பின்னர் இடைநிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய அரச பகுப்பாய்வுத் திணைக்களத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க முன்னிலைப்படுத்தப்பட்டார்.

சில மணிநேரம் அவரது குரல் சோதனை செய்யப்பட்டது. பின்னர் சிறைச்சாலை அதிகாரிகளால் அவர் நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

No comments