செல்வி. திக்சிகா அவர்கள் “தேசத்தின் இளஞ்சுடர்” என மதிப்பளிப்பு.

01.02.2020

செல்வி. திக்சிகா சிறிபாலகிருஸ்ணன் அவர்கள்
“தேசத்தின் இளஞ்சுடர்” என மதிப்பளிப்பு.


இளையோர் அமைப்பின் பிரித்தானியாப் பொறுப்பாளர் செல்வி. திக்சிகா சிறிபாலகிருஸ்ணன்  அவர்கள்இ கடந்த 30.01.2020 அன்று உடல்நலம் பாதிப்படைந்த நிலையில் சாவடைந்தார் என்ற செய்தி எம் நெஞ்சங்களில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழீழ விடுதலை நோக்கிய எமது செயற்பாட்டில் சிறுவயதில் இருந்தே தன்னை ஈடுபடுத்துவதில்  ஆர்வமிக்கவராக இருந்துஇ 2004ஆம் ஆண்டு இளையோர் அமைப்பின் உதவியாளராக செயற்பட்டு 2005ஆம் ஆண்டு செயற்பாட்டாளராக இணைத்துக்கொண்டவர்.

போராட்டத்தின் தேவையை உணர்ந்து விடுதலைசார் கருத்துருவாக்க விழிப்புணர்வுகளை நாடகங்கள், எழுச்சிநடனங்கள், எழுத்துருவாக்கங்கள் என பல்துறை வடிவங்களில் வெளிப்படுத்தி, எமது மக்களுக்கு மட்டுமல்லாது வேற்றின மக்களுக்கும் எடுத்துச்செல்வதில் பெரும்பங்காற்றியிருந்தார்.

தமிழீழ மண்ணில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தமிழின அழிப்பை அனைத்துலக சமூகத்திடம் கொண்டுசெல்ல பல்வேறு வேலைத்திட்டங்களைத் திட்டமிட்டு செயலாற்றி, அதை பல் மொழிகளில் சமூகவலைத்தளங்கள் ஊடாகப் பரப்புரைகளை மேற்கொண்டதுடன் இளையோர் ஆதரவுத் தளத்தையும் வலுப்படுத்த இரவு, பகல் பாராது அயராது உழைத்தவராவார்.

இவரது ஆற்றலும், ஆளுமையும், தாயகப்பற்றுறுதியும் எப்போதுமே திடமானவை. 2009 ஆம் ஆண்டில் தாயகத்தில் ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னரும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் சிந்தனைக்கமைவாக இளையோரின் தேவையை நன்குணர்ந்து புலம்பெயர் போராட்டங்கள் அனைத்திலும் பங்குபற்றியது மட்டுமல்லாது அதனை பொறுப்புடனும் செயற்படுத்தியிருந்தார்.

புலம் பெயர் தமிழர் வரலாற்றில் செல்வி. திக்சிகா அவர்களின்  விடுதலைச் செயற்பாடுகள் தமிழீழ வரலாற்றில் இடம்பெறும் என்பது திண்ணம். இன்று இளையோர் அமைப்பால் தொடரப்படுகின்ற தாயக விடுதலைப் பணிகளுக்கு இவரின் பங்களிப்பு ஒரு எடுத்துக்காட்டாகவே அமைகின்றது.

நோய் வருத்தியபோதும் தளராமல் ஓய்வின்றி, தாயகவிடுதலைக் கனவோடு பணியாற்றிய இளையவளை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர், நண்பர்களின்  துன்பத்தில் நாமும் பங்கெடுத்துக் கொள்வதுடன், அவர்களுக்கு எமது ஆறுதலையும்  தெரிவித்துக்கொள்கின்றோம். செல்வி. திக்சிகா சிறிபாலகிருஸ்ணன் அவர்களின் இனப்பற்று, விடுதலைப்பற்று, எம் தேசத்துக்கு அவர் வழங்கிய உயரிய பங்களிப்பிற்காக “தேசத்தின் இளஞ்சுடர்” என மதிப்பளிப்பதில் நாம் பெருமையடைகின்றோம்.

                                             “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

அனைத்துலகத் தொடர்பகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.



No comments