மத ரீதியான பிளவு அபாயமானது:சுரேன்!
தமிழர் தாயகத்தில் மத ரீதியான பிளவுகளை தோற்றுவிப்பதில் அரசியல் தரப்புக்கள் சில மும்முரமாகியுள்ளன.குறிப்பாக மன்னாரில் மத ரீதியான பிளவுகள் உச்சம் பெற்றுள்ள நிலையில் தற்போது அது யாழிற்கும் பரவ தொடங்கியுள்ளது.
இதனை கண்டித்துள்ள டெலோ பிரமுகர் குருசாமி சுரேன் மேலும் கருத்து வெளியிடுகையில்
பல்லின மக்களும் பல சமயத்தவர்களும் வாழும் இந்த நாட்டில் தனித்துவமும் சகிப்புத்தன்மையுடனும் வாழும்போதுதான் ஆரோக்கியமான எதிர்காலத்தை நோக்கி பயணிக்கமுடியும். அதைவிடுத்து மதத்தின் பெயரிலோ இனத்தின் பெயரிலோ மேலாதிக்கத்தையோ வன்முறைகளையோ பிரயோகிக்கும் மனப்பாங்கை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

குறிப்பாக நாம் வாழும் நாட்டிலேயே இரண்டாம்தர பிரஜைகளாக நடத்தப்படும் தமிழர்களாகிய நாம் எமக்குள் மதங்களின் பெயரால் மோதிக்கொள்வது எம்மை மேலும் பலவீனப்படுத்திவிடும்.  பல்வேறு மதங்களை பின்பற்றும் நாம் எமது சமயத்தை சரியாக பின்பற்றி மதத்தின் சித்தாந்தங்களை சரியாக கற்றுக்கொண்டால் பிறிதொரு மதத்தை ஆக்கிரமிக்கவோ வன்முறைகளை பிரயோகிக்கவோ முற்பட மாட்டோம்.

நாடு தீர்க்கமான பொது தேர்தல் ஒன்றை சந்திக்கவுள்ள நிலையில் சில அரசியல் வாதிகள் இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டிவிடும் செயற்பாடுகளை மேற்கொண்டுவரும் நிலையில் அவர்களின் எதிர்பார்ப்புக்கோ அல்லது சுயநல அரசியல் நகழ்ச்சிநிரல்களுக்குள்ளோ நாம் சிக்கிவிடாமால் தமிழினம் எதிர்நோக்கியுள்ள அரசியல் நெருக்கடியிலிருந்து விடுபடுவதற்கான தீர்க்கமான முடிவுகளை எடுக்கக்கூடியவர்களாகவும் சாதி , மதங்களை கடந்து இனத்தின் விடுதலைபற்றி சிந்திக்ககூடியவர்களாகவும் மாற வேண்டும் என்றார்.

No comments