கூட்டமைப்புக்கு எல்லோரும் கூட்டாக வர அழைக்கிறார் சித்தர்?


சி.வி.விக்கினேஸ்வரன், சுரேஸ்பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  என அது யாராக இருந்தாலும் அவர்களையும் கூட்டமைப்பில் இணைத்துக் கொண்டு ஒற்றுமையாக ஓரணியில் பயணிப்பதே சிறந்தது, இப்படியாக நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பது இனத்திற்கு பலமான விசயமென்றிருக்கிறார் த.சித்தார்த்தன்.

ஆயினும் என்னைப் பொறுத்தமட்டில் இது எனது நிலைப்பாடாக இருக்கிறது. ஆனாலும் கூட்டமைப்பு என்ற வகையில் ஏனைய தரப்புக்களுடன் கலந்து பேசி இது குறித்து சாதகமான ஒரு முடிவை எடுக்க முடியுமென்று கருதுகின்றேன் என்றார்.

இதனிடையே விக்கினேஸ்வரனின் அணியில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பும் வரவில்லை. அந்த அணியில் இணைந்து கொள்ளும் நோக்கமும் இல்லை. கூட்டமைப்பிற்கு வெளியில் இருக்கின்ற அனைவiருயும் இணைத்துக் கொண்டு கூட்டமைப்பை பலமான அமைப்பாக கட்டியெழுப்பதே எமது நோக்கமாக இருக்கின்றதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

விக்கினேஸ்வரன் ஐயாவின் புதிய அணியில் இணைந்து கொள்ளுமாறு நேரடியாக அழைப்புக்கள் எவையும் வரவில்லை. அது குறித்து அவர்கள் கேட்கவும் இல்லை. அதே நேரத்தில் அவர்களுடன் இணைந்து கொள்வது தொடர்பில் நாங்களும் கதைக்கவும் இல்லை.

ஆனால் விக்கினேஸ்வரன் ஐயாவே தம்பி சித்தார்த்தன் தன்னுடன் வர மாட்டார் என்று சொல்லியிருந்ததாக நான் ஊடகங்களில் பார்த்திருந்தேன். ஏனெனில் தேர்தலில் கூட்டமைப்பில் இருந்தால் தான் வெற்றி பெறலாமென்று அவர் அங்கிருக்கின்றார்.

ஆகவே வர மாட்டார் என்று சொல்லியிருந்தார். ஆகையினால் இங்கிருந்தால் வெற்றி பெறலாமென்பது அவருக்கும் தெரிந்து இருக்கிறது போல இருக்கிறது.  அதைவிட முக்கியமான அம்சம் என்னவெனில் என்னைப் பொறுத்தமட்டில் அந்த அணி சிறந்த மாற்று அணியாக அமையுமா என்பது கேள்விக்குறியாக இருக்கின்றது.

இதே வேளை அந்த அணியிலுள்ள சுரேஸ்பிரேமச்சந்திரன் பகிரங்கமாகவே புளொட் மற்றும் ரெலோ வந்து சேர வேண்டுமென அழைப்பு விடுத்திருக்கின்றார். ஆனாலும் நாங்கள் போக முடியாது. எங்களைப் பொறுத்த மட்டில் கூட்டமைப்பு பலமாக இருக்க வேண்டும். இந்தக் கூட்டமைப்பைப் பலப்படுத்திக் கொண்டு கூட்டமைப்புடனனேயே செயற்படுவோமென்ற நம்பிக்கை இருக்கிறதெனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

No comments