நாம் எதிர்க்கவில்லை - கூட்டமைப்பை விரட்டுவோம்

சாய்ந்தமருதுக்கு நகர சபை வழங்கியதை நாம் ஒருபோதும் எதிர்க்கவில்லை. ஆனால் முப்பது வருடங்கள் கோரிக்கையாக இருக்கின்ற கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை இன்றுவரை ஒரு முழுமையான பிரதேச செயலகமாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டு இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என தமிழ் மக்கள் கூட்டணியின் முக்கியஸ்தரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் அரசியல் சூழ்நிலைகள் மற்றும் எதிர்கால நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக தமிழர் விடுதலை கூட்டணியின் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களின் பங்குபற்றலுடன் அம்பாறை -  கல்முனை பிரதேச தனியார் மண்டபம் ஒன்றில் இன்று (16) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு அவர் கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

கருணாவுக்கு இருக்கின்ற சக்தியை பிரயோகித்து அடுத்த பத்து நாட்களுக்குள் இந்த வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்திக் கொடுப்பாராக இருந்தால் நான் அவரைப் பாராட்டுவேன்.

அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இங்கு பிரதி நிதித்துவத்தை பெற அனைத்து தரப்புடனும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும். இல்லையேல் அதற்கும் முழுப் பொறுப்பு கூற வேண்டியவர்கள் கூட்டமைப்பினரே. அம்பாறை மாவட்டத்தில் அனைத்து கட்சிகளுடனும் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு சரியான முடிவு எடுக்காவிட்டால் அங்கிருந்து அவர்கள் விரட்டியடிக்கப்படுவார்கள்.

சுமந்திரன் பேசுகின்ற அனைத்தும் பொய்யான விடயங்கள். அவர் எப்போதும் உண்மை பேசியது கிடையாது. கடந்த அரசாங்கத்துக்கு இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை கால அவகாசம் பெற்றுக் கொடுத்திருந்தார். தேர்தல் நெருங்கும் வேளைகளில் இலங்கை அரசை பொறிக்குள் சிக்க வைப்போம் என அறிக்கையும் வெளியிடுகின்றார். நான்கு வருடங்களாக இந்த இலங்கை அரசை பொறிக்குள் சிக்க வைக்க முடியாமல் இருந்த சுமந்திரன், தாம் கால அவகாசம் வழங்கவில்லை இலங்கை அரசை கண்காணித்துக் கொண்டிருந்தோம் என்று கூறுகிறார். - என்றார்.

No comments