மூர்க்கத்தனமான பகிடிவதை; சீனியருக்கு தடை

யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் மோசமான முறையில் பகிடிவதையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுக்குள்ளாகிய மூத்த மாணவன் ஒருவருக்கு மறு அறிவித்தல் வரை பல்கலைக்கழக கற்கைநெறிகளில் ஈடுபடவோ, வளாகங்களுக்குள் நுழையவோ முடியாதவாறு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட மாணவன் மீதான ஒழுக்காற்று விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஏதுவாகவும் விசாரணைகளில் தலையீடுகளைத் தவிர்ப்பதற்காகவும் பல்கலைக்கழக எல்லைக்குள் நுழைவதற்கான (Out of Bounds) இடைக்காலத் தடை விதிக்கப்படுவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தின் தொழில்நுட்பப் பீடத்தின் முதுநிலை மாணவர்கள் சிலர் புதுமுக மாணவிகள் சிலர் மீது மோசமான பகிடிவதையில் ஈடுபட்டதாகவும், கைபேசி மூலமாக பாலியல் சேட்டையில் ஈடுபட்படதாகவும் பல்கலைக்கழக நிர்வாகத்துக்குக் கிடைத்த தகவலையடுத்து ஒழுக்காற்றுக் குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்துக்கு நேற்று சென்றிருந்த குழு அங்குள்ள அதிகாரிகள், மாணவர்கள் சிலரிடம் விசாரணைகளை முன்னெடுத்திருந்தது. எனினும் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் தரப்பிடமோ, குற்றஞ்சாட்டப்படும் தரப்பிடமோ விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை என்று அறியமுடிகிறது.

No comments