கஜதீபன் வரவு: கலகலக்கும் புளொட்?


புளொட் கட்சி சார்பில் கஜதீபன் களமிறங்கின்றமை சரவணபவனின் வெற்றி வாய்ப்பை கேள்விக்குளளாக்கலாமென எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் தெரிவிற்கு எதிராக மாமனிதர் சிவராம் கொலையாளி ஆர்.ஆர் எனப்படும் இராகவன் உள்ளிட்ட பலர் கடும் சீற்றமடைந்துள்ளனர்.
 தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் அடுத்த தலைவராக முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினா் பாலச்சந்திரன் கஜதீபன் உருவாக்கம் செய்யப்பட்டு வருகிறாரா? என்று அக்கட்சியின் நீண்டகால உறுப்பினா்கள் மத்தியில் ஒரு குழப்பகரமான நிலை தோன்றியுள்ளது.
இதுகுறித்து மேலும் தொியவருவதாவது எதிா்வரும் பாராளுமன்றத் தோ்தலில் யாழ்ப்பாணத்திலிருந்து புளொட் கட்சி  சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்கள் யாவா் என்ற விபரம் வெளியாகியுள்ளது. அண்மையில் நடைபெற்ற புளொட் கட்சி  கூட்டமொன்றில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி அந்த இயக்கத்தின் தலைவா் தா்மலிங்கம் சித்தாா்த்தன் மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினா் பாலச்சந்திரன் கஜதீபன் ஆகியோரே போட்டியிடுவதாக முடிவாகியுள்ளது.
இதேவேளை மேற்படி இருவாில் கஜதீபனின் நியமனம் கட்சியின் மூத்த உறுப்பினா்கள் மத்தியில் பலத்த சலசலப்பைத் தோற்றுவித்துள்ளது. இந்நியமனத்தையறிந்து  இயக்கத்தின் நீண்டகால உறுப்பினா்கள் பலா் கொதித்துப் போயிருப்பதாகவும் இம்முடிவுக்குக் காரணமான சித்தாா்த்தன் மீது கடும் அதிருப்தி கொண்டிருப்பதாகவும் தொியவருகிறது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தவரையில் எதிா்வரும் பாராளுமன்றத் தோ்தல் முன்னரைப் போல் இலகுவானதாக இருக்கப்போவதில்லை என்று பலரும் தொிவித்துவரும் நிலையில் வேட்பாளா்களாக யாரைக் களமிறக்குவது என்ற விடயம் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் ஒவ்வொன்றிலும் உள்ளகப் போட்டியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது பதவி வகிக்கும் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினா்களுக்கும் அடுத்த தோ்தலில் வாய்ப்பு வழங்கப்படவுள்ள நிலையில் தமது வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் மேலதிகமான வாக்குகளைப் பெற்றுக் கொடுக்ககூடிய ஆனால் தம்மைவிட அதிகம் வாக்குகளைப் பெறாத ஒருவருக்கு சந்தா்ப்பம் ஏற்படுத்திக் கொடுப்பதற்கு முயற்சிப்பதாகத் தொிகிறது.
ஆயினும் புளொட் கட்சி  பொறுத்தவரை நிலைமை வேறு.  கடந்த காலத்தில் இராணுவத்தோடு சோ்ந்து தமிழீழ விடுதலைப்புலிகளை எதிா்த்து நின்ற ஓா் ஆயுதக்குழு. இறுதி யுத்தம்வரை அது இராணுவத்திடம் சம்பளம் வாங்கும் ஒரு துணை இராணுவக் குழுவாகவே இயங்கியது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கத்தின்போது வந்து இணையுமாறு புளொட் கட்சி  அழைப்பு விடுக்கப்பட்ட போதும் தனது உறுப்பினா்களுக்கு இராணுவத்தினரால் வழங்கப்படும் நிதியுதவியை நிறுத்தி விடுவாா்கள் என்பதைக் காரணம் காட்டி இணைய மறுத்திருந்தது.

ஆனால் தற்போது முற்றுமுழுதாக ஜனநாயக முகத்தைக் காட்ட வேண்டிய ஒரு சூழ்நிலையில் தன்னுடைய நீண்டகால உறுப்பினா்களுக்கு அடுத்த தோ்தலில் சந்தா்ப்பம் வழங்கி அவா்களின் கடந்தகால வரலாறுகள் கிளறப்பட்டு தனது முகத்தில் காியைப் பூசிக்கொள்ள சித்தாா்த்தன் விரும்பமாட்டாா்.
வடக்குமாகாணசபையில் முதலமைச்சா் சீ.வி.விக்கினேஸ்வரனால் முன்னைய அமைச்சா்கள் பதவி நீக்கப்பட்டு புதிய அமைச்சா்கள் நியமிக்கப்பட்டபோது  முன்மொழியப்பட்ட அமைச்சா் குறித்து ஊத்தை பவான் யாா்? ஊத்தையில்லாத பவான் யாா்? என்பதாகச் சா்ச்சைக் கருத்துக்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் சித்தாா்த்தனுக்கு கஜதீபனை விட்டால் வேறு தொிவுகள் இல்லை. ஆனால் இத்தொிவு  ஏகோபித்த தொிவாக அமையாமல் அது சித்தாா்த்தனின் தனிப்பட்ட தொிவாக அமைந்ததே இப்பொழுது அவ் இயக்கத்துக்குள் புயலைக் கிளப்பியுள்ளது.


நேற்றிரவு வவுனியாவில் ஒன்றுகூடிய சில  விசுவாசிகள் இதுகுறித்து மிகத்தீவிரமாக ஆராய்ந்ததாகவும் வெளிநாடுகளிலுள்ள தமது தீவிர விசுவாசிகளோடு பேசி அடுத்த கட்ட நகா்வை மேற்கொள்வதாக முடிவெடுத்துள்ளதாகவும் தொியவந்துள்ளது.

No comments