3 ஆண்டுகள் கடந்து தொடரும் போராட்டம்

 வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டி காணாமல் ஆக்கப்பட்டோரின உறவுகளினால் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்படும் தொடர் போராட்டம் இன்றுடன் (20) மூன்று வருடங்கள் கடந்து நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் இன்று காலை கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மூன்ற ஆண்டுகளை பூர்த்தி செய்திருக்கும் இந்த போராட்டம் இன்று 1096 நாட்களை தொடிருக்கின்றது. இத்தனை நாட்களும் மழை, வெயில், பனி பாராது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வீதிகளிலும், அரச அலுவலகங்களிற்கு முன்னாலும் நின்று தமது உறவுகளுக்காக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இந்த அரசு செவிசாய்ப்பதாக இல்லை.

இன்று போராட்டத்தில் ஈடுபட்ட உறவுகளால் "ஐ.நாவே சிறலங்கா அரசின் நேர்மையீனம் இன்னும் உனக்கு புரியவில்லையா?, சிறீலங்கா அரசினை தாமதமின்றி சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்குப் பாரப்படுத்து, ஓஎம்பி (OMP) வேண்டாம், எமது பிள்ளைகள் எங்கே, வேண்டும் வேண்டும் சர்வதேச விசாரணை வேண்டும், எமது பிள்ளைகளை எம்மிடம் ஒப்படை" போன்ற வாசகங்களுடன் தமது பிள்ளைகளின் படங்களை ஏந்தியவாறு உணர்வுகளை வெளிப்படுத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது கருத்துகளை தெரிவிக்கும் போது, "வீதிக்கு வந்து எமது உறவுகளை தேடி மூன்று வருடங்கள் முடிவடைந்துள்ளது. எம்மை யாருமே திரும்பி பார்க்காமல் நிறைய வேதனைகளையும் வலிகளையும் சுமந்து நிற்கிறோம். வீதிகளில் எத்தனையோ போராட்டங்களை செய்தாலும் அனைவரும் கைகொடுத்தாலும் எமது உறவுகள் கிடைக்க கூடிய வகையில் யாருமே எங்களுடைய பிரச்சினையை பார்க்கவில்லை. எங்களுடைய உறவுகளை எம்மிடம் ஒப்படைக்கும் வரை போராட்டம் தொடரும். எமது உறவுகளை சிறீலங்கா இராணுவத்திடமும் துணை இராணுவக் குழுக்களிடமும் கைகளினால் ஒப்படைத்த உறவுகளை கேட்கிறோம். மக்கள் வலிகளை புரிந்து சிறீலங்கா அரசுக்கு சர்வதேசம் அழுத்தம் கொடுத்து எமது உறவுகளை மீட்டுத்தர வேண்டும்" எனக் குறிப்பிட்டார்கள்.






No comments