கொவிட்-19 தாக்கிய சீன பெண் விடுதலை?

கொரோனா எனும் கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் அங்கொடை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சீனப் பெண் தனது தாய்நாட்டுக்கு திரும்பிச் செல்லவுள்ளார்.

குறித்த பெண் பூரணமாக குணமடைந்துள்ள நிலையில் இன்று (19) முற்பகல் வைத்தியசாலையில் இருந்து விடுவிக்கப்பட்டு மலர்ச்செண்டு வழங்கி வழியனுப்பி வைக்கப்பட்டார்.

மன நெகிழ்வுக்குரிய இந்த தருணத்தில் இலங்கையின் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, மருத்துவமனையின் வைத்திய நிபுணர்கள், தாதியர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

சீனாவின் ஹுபே மாகாணத்தைச் சேர்ந்த 43 வயதான இந்தப் பெண் இலங்கையில் சுற்றுலா மேற்கொண்டிருந்த நிலையில், கடந்த மாதம் 26ம் திகதி கொரோனா வைரஸ் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவர் மீது பரிசோதனை மேற்கொண்ட இலங்கை வைத்திய நிபுணர்கள், அப்பெண்ணுக்கு கொரோனா இருப்பதை உறுதி செய்திருந்தனர். சில நாட்களின் பின்னர் அப்பெண் பூரணமாக குணமடைந்திருந்தார்.

இதனையடுத்து சுகாதார அமைச்சு அவர் வீடு திரும்புவதற்கான அனுமதியை வழங்கியது. வைத்தியசாலையில் இருந்து சுகமடைந்து பிரியாவிடை வழங்கி வழியனுப்பப்பட்டுள்ள அவர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக சீனாவுக்கு செல்லவுள்ளதாகவும் வைத்தியர் சுதத் சமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.

No comments