கோத்தா பொக்கட்டினுள் இலங்கை நீதித்துறை?


கோத்தபாயா ராஜபக்சே சம்பந்தப்பட்ட மிக் விமான கொள்வனவு ஊழல் வழக்குடன் தொடர்புடைய ராஜபக்சே சகோதரர்களின் மச்சானும் ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவருமான உதயங்க வீரதுங்க அவர்களின் பிணை விண்ணப்பதிற்கு அரசாங்க உயர்மட்ட பின்னணியில் போலீஸ் குற்ற புலனாய்வு துறை துணை போனமை நேற்று அம்பலப்படுத்த பட்டு இருக்கிறது.

இலங்கை அரசாங்கத்திற்கு 7 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டம் ஏற்படுத்தபட்டதாக சொல்லப்படும் இந்த வழக்கு பொதுச் சொத்து சேதம் சட்டத்தின் (Public Property Act) கீழ் விசாரிக்கப்டுகிறது. இந்த சட்டத்தின் கீழ் விசாரணைகள் முடிவடைந்த சந்தேகநபரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைத்திருக்க வேண்டுமாயின் சந்தேகநபர் 25,000 ரூபாவுக்கு அதிகமான நட்டம்/ சேதாரம் ஏற்படுத்தியது தொடர்பாக பொலிஸ் அதிகாரி உறுதிப்படுத்திய B report நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

ஆனால் நேற்றைய தினம் பொலிஸ் அதிகாரிகள் B report ஐ சமர்பிக்காமல் உதயங்க வீரதுங்க அவர்கள் சமர்ப்பித்த பிணை விண்ணப்பத்திற்கு துணை நின்றார்கள்.இலங்கை அரசாங்கத்திற்கு 7 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டம் ஏற்படுத்திய வழக்கில் B report ஐ சமர்பிக்காமல் சந்தேக நபரின் பிணை விண்ணப்பித்திற்கு பொலிஸ் அதிகாரிகள் துணை போனமை இலங்கையின் சட்ட ஆட்சியில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை காட்டுகிறது. இதன் பிண்ணனியில் ராஜபக்சே தரப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. கோத்தபாயா ராஜபக்சே இந்த வழக்கில் தனிப்பட்ட ஈடுபாடு காட்டுவதாகவும் சொல்லுகிறார்கள்.

ராஜபக்சே சகோதரர்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் மிக் விமான கொடுக்கல் வாங்கல் தொடர்பில் 2005ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடக்கம் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை ஐந்து வருட காலங்கள் விசாரணைகளை முன்னெடுத்து வந்த பிரதான பொலிஸ் அதிகாரி நிஹால் பிரான்சிஸ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்திற்கு இடம்மாற்றப்பட்டார். அத்துடன் இந்த விசாரணைகள் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் நியமிக்கப்பட்ட சட்ட அதிகாரியும் மாற்றப்பட்டுள்ளார்.

கோட்டாபய ராஜபக்சே பாதுகாப்பு செயலராக இருந்த போது மிக் விமான கொள்வனவு மோசடியை முதன் முதலில் வெளிக்கொணர்ந்த சண்டே டைம்ஸ் பத்திரிகையின் பாதுகாப்பு நிருபர் இக்பால் அத்தாஸ் 2008 நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இந்த வழக்கு தொடர்பான பல்வேறு ஆவணங்களை வெளியிட்ட Sunday Leader ஆசிரியர் லசந்தா விக்ரமதுங்கே.ஜனவரி 8, 2009 அன்று, கொழும்பின் தெருக்களில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார்.


சுதந்திர இலங்கையில் நீதித்துறை மற்றும் பொலிஸ் எப்போதும் ஆட்சியாளர்களின் விருப்பங்களை மட்டுமே நிறைவேற்றி வருவது நேற்றைய சம்பவம் மற்றுமொரு சான்று. சிறுபான்மை சமூகங்களுக்கு இது தொடர்பாக நீண்ட அனுபவம் இருக்கிறது. சர்வதேச விசாரணை குறித்து சாதாரண மக்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதும் இந்த அனுபவங்களின் படிப்பனை தான் .

No comments