மகப்பேற்று மருத்துவ நிபுனருக்கு அன்பே சிவம் விருது

மகப்பேற்று மருத்துவ நிபுணர் வைத்திய கலாநிதி நமசிவாயம் சரவணபவ, அகில இலங்கை சைவ மகா சபையின் "அன்பே சிவம்" விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

தைப்பூசத் திருநாளை முன்னிட்டு அகில இலங்கை சைவ மகா சபையின் ‘அன்பே சிவம்‘ விருது வழங்கலும் சஞ்சிகை வெளியீடும் இன்று (08) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி மண்டபத்தில் அகில இலங்கை சைவ மகா சபையின் தலைவர் சிவத்திரு ந.சண்முகரத்தினம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அகில இலங்கை சைவ மகா சபையின் ‘அன்பே சிவம்’ விருது மகப்பேற்று மருத்துவ நிபுணர் வைத்திய கலாநிதி நமசிவாயம் சரவணபவவுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அன்பே சிவம் சஞ்சிகை வெளியிட்டு வைக்கப்பட்டது.

நிகழ்வின் ஆசியுரையினை திருகோணமலை தென்கயிலை ஆதின குரு முதல்வர் தவத்திரு. அகத்தியர் அடிகளார் மற்றும் யாழ்ப்பாணம் சின்மயா ஞானவேல் ஆச்சிரம வதிவிட ஆச்சாரியார் தவத்திரு. சிதாகாசானந்தா சுவாமிகள் ஆகியோர் நிகழ்த்தியிருந்தனர்.

நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் கலந்துகொண்டிருந்தார். அத்தோடு யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான தொழிநுட்பப் பீட முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் சி.சிறிசற்குணராசா, கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ஒய்வுநிலை விரிவுரையாளர் சி.குணசீலன், யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஏ.தேவநேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

No comments