எதிர்காலத்தில் போராளிகள் இணைவார்கள் - விடுதலை புலிகள்

எதிர்வரும் காலங்களில் போராளிகள் அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது என்று விடுதலைப்புலிகள் மக்கள் பேரவையின் தலைவர் மலரவன் தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகள் மக்கள் பேரவையின் மாவட்ட நிர்வாக ஒருங்கினைப்பு கூட்டம் வவுனியாவில் அமைந்துள்ள தனியார் விடுதியில் இன்று (09) இடம்பெற்றது.

இதன்பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும்,

மக்களை ஒருங்கிணைப்பதுடன் எதிர்வரும் தேர்தல் காலங்களில் நாம் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பாக இன்று கலந்துரையாடியிருக்கிறோம்.

விடுதலை புலிகள் மக்கள் பேரவையின் அரசியல் வேலைத்திட்டமும், நகர்வுகளும் மக்களை உள்ளடக்கியதாக அவர்களின் ஆலோசனைகளை பெறும் வகையில்தான்  காணப்படுகின்றது. எனவே எதிர்காலத்தில் நாம் எப்படி பயணிபோம் என்பதை மக்களே தீர்மானிப்பார்கள்.

முன்னாள் முதலமைச்சர் தலைமையிலான புதிய கூட்டணியிடம் இருந்து எமக்கு எந்தவித அழைப்புகளும் வரவில்லை. அது தொடர்பாக நாங்களும் எந்த விருப்பத்தையும் தெரிவிக்கவில்லை.

ஆனாலும்  நலன்சார்ந்த வேலைதிட்டமொன்று தமிழ் மக்கள் வாழும் நிலப்பரப்பில் நடைபெறுமானால், எதிர்வரும் காலங்களில் இணைந்து செயற்படுவது தொடர்பாக ஆலோசித்து முடிவெடுப்போம்.

நாம் எந்தவொரு தனிநபரையும் தாக்ககூடிய வகையிலான பேச்சினை ஒருபோதும் வெளிப்படுத்தவில்லை. அந்தவகையில் எதிர்வரும் காலங்களில் போராளிகள் அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது - என்றார்.

No comments