மக்களுக்கு வேண்டியது தெளிந்த தமிழ்த் தேசியப் பார்வையும் அறிவார்ந்த அர்ப்பணிப்புள்ள தலைமையும்

எரிகின்ற வீட்டில் கொள்ளி  பிடுங்குவது போல்  தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கும்  சுயநலம் கொண்ட  தமிழ் கும்பல்களினால்  தமிழ் மக்களின் தேசிய வாழ்வும்  தமிழ் சமூகமும் நிர்மூலமாக்கப்பட்டுச்  செல்கிறது.

முள்ளிவாய்க்கால் ஒருபுறம் பேரழிவைத் தந்தபோதிலும்  மறுபுறம்  தமிழ் மக்களுக்கான புது வாழ்வை கட்டியெழுப்புவதற்க் கேற்ற ஒரு புதிய வரலாற்றுச் சூழலையும் முன்வைக்கத் தவறவில்லை.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையும் பேரழிவும் அடுத்தகட்ட வரலாற்றை இரண்டில் ஒரு பக்கம்  இட்டுச் செல்வதற்கான  வாய்ப்பை  முன்வைத்தது.

1)  இனப்படுகொலை ரீதியிலான வெற்றியின் மூலம் தமிழினத்தை முற்றாக ஒழித்துக் கட்டுவதற்கான வாய்ப்புக்களை பல வழிகளிலும்  எதிரிக்கு அது வழங்கியது .

2)    எதிரி புரிந்த இனப்படுகொலையின் வாயிலாக எதிரியின் ஈவிரக்கமற்ற மனிதகுல விரோத செயலை  உலகளாவிய ரீதியில் அம்பலப்படுத்தியதுடன்  அத்தகைய இனப்படுகொலைப் பேரழிவிலிருந்து தமிழினம் தன்னை புதிய பாதையில் சிந்தித்து  மறுக்கப்பட முடியாத சர்வதேச  நியாயப்பாட்டுடன் புது மெருகுடனான புதிய தமிழ்த் தேசியத்தை கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பையும் வழங்கியது.

இந்த இரண்டாவதை தமிழ் தலைவர்களும் தமிழ் அறிஞர்களும் செய்வதற்கு பதிலாக  இன அழிப்பை மேலும் நிலைநாட்டவும் உறுதிப்படுத்தவும் வல்ல எதிரியின் செயல்களுக்கும்  எதிரியின் நிகழ்ச்சிநிரல்களுக்கும் பொருத்தமாக  பொதுவாகத் தமிழ்  தலைவர்கள்  நடந்து கொண்டனர்.

புதிய  நிலைமைகளுக்கும்   புதிய சூழல்களுக்கும் பொருத்தமாகத் தமிழ் தேசியத்தை  வழிநடத்துவதற்குத் தேவையான புதிய கருத்துக்கள் ஆங்காங்கே உதிரிகளாக சிலரால்  முன்வைக்கப்பட்டிருந்தாலும்   அவை  ஒரு பொதுவான அறிவியல் போக்காக  உருவெடுக்கவில்லை  என்பதுடன் அத்தகைய அறிவார்ந்த கருத்துக்கள் எதுவும் அரசியல் தீர்மானங்களாக  பரிணமிக்கவும்  இல்லை.

அறிவியலாளர்கள் அறிவார்ந்த ரீதியில் சமூக ,பொருளாதார ,அரசியல் கருத்துக்களை முன்வைத்தாலும் அவற்றை அரசியல்வாதிகளே அரசியல் தீர்மானங்களாக   வடிவமைத்து முன்னெடுக்க வேண்டும்.  ஆனால் அரசியல் தலைவர்களிடம் அவ்வாறான அறிவியல் பரிமாணம் அல்லது அறிவார்ந்த பார்வையில்லாத மையினாலும்  அவர்களது சுயநலம் கொண்ட அரசியல் அபிலாசைகளினாலும்  நடைமுறையில் அவர்கள் எதிரிக்கு சேவை செய்யும் அரசியலையே பிரதானமாக முன்னெடுத்தனர்,  தொடர்ந்தும்   அவ்வாறே முன்னெடுக்கின்றனர்.

அழிவுகளும் ,   இழப்புகளும் துன்பங்களும் நிறைந்த ஒரு பிரளயம் போன்ற இந்த காலகட்டத்தில்  மக்களின்  தந்தையாய்,   தாயாய்   செயற்படவல்ல தலைவர்கள்   உருவாக வேண்டியது அவசியம்.  தன் குட்டியை பேர் அன்புடனும்  பெரும் அக்கறையுடனும்  அரவணைத்து வளர்க்கும் தாய் யானை போன்ற  தலைவர்களை பிரசவிக்க  வல்லதற்கான வரலாற்று கட்டத்தை முள்ளிவாய்க்காற்  பேரழிவு  பிறப்பித்துள்ளது .

தென்னாபிரிக்காவின் தேசத் தந்தையாக  நெல்சன் மண்டேலா   தோன்றினார்.  இருபத்தாறு ஆண்டுகள்  கொடும் சிறையில் இருந்தபோதும்  கல்லுடைக்கும் தண்டனை  கைதியாய்   சிறையில் துயரப்பட்ட போதிலும்  அவர் மக்களை நேசிக்கவும் தவறவில்லை விடுதலைக்கான பாதையில் வழுவவுமில்லை.  கடும் குளிரிலும் அரைக்கால் சட்டை அணிந்த கைதியாக இருந்த   அவர்     சிறைச்  சூழலில் காணப்பட்ட தட்பவெப்ப நிலையை   சமாளிப்பதற்க் கேற்ற நீண்ட கால்சட்டையை தமக்குத் தருமாறு  மண்டேலா  கோரினார்.  அவரது நீண்ட போராட்டத்தின் பின்பு அவருக்கு மட்டும்  நீண்ட காற்சட்டையை சிறை அதிகாரி வழங்கிய  போது  இத்தகைய  நீண்ட  காற்சட்டை அனைத்து கைதிகளுக்கும் வழங்கப்படுமா என்று  மண்டேலா கேட்டார்.   ""அவ்வாறு இல்லை.  அது உனக்கு மட்டும்தான் வழங்கப்படும். அவர்களுக்கு இந்த  நீண்ட காற்சட்டை வழங்கப்படமாட்டாது"" என  சிறைஅதிகாரி மண்டேலாவிடம்  கூறிய  போது  ஏனைய சிறைக்கைதிகளுக்கு வழங்கப்படாத நீண்ட காட்சட்டை தனக்கு வேண்டாம் என்று நிராகரித்தார்.

இவ்வாறு  இன்னொருமுறை  மண்டேலாவின் பிறந்தநாளன்று  பிறந்தநாளை  மண்டேலா கொண்டாடுவதற்கு ஏற்ற  ஏற்பாடுகளை  ஆட்சியாளர் செய்திருந்தனர்.  ஆடை மற்றும் சிற்றுண்டிகளென    தேவையான ஏற்பாடுகள்  பெரிதாகச் செய்யப்பட்டன . அவ்வாறு ஏனைய கைதிகளும்  தங்கள் தங்கள்   பிறந்த நாட்களை கொண்டாடுவதற்கு ஏற்பாடுகள் இல்லாத இடத்து    தனக்கு மட்டும் வழங்கப்படும் ஏற்பாட்டை அவர்  முற்றிலும் நிராகரித்தார்.

உண்மையில் மண்டேலா அனைத்து  தென்னாபிரிக்க   மக்களினதும் தேசபிதாதான்.

மண்டேலா ஜனாதிபதியாக இருக்கும் போது  ஒருமுறை  உணவு அருந்துவதற்காக  உணவு விடுதி  ஒன்றிற்கு  சென்றிருந்தார்.  அங்கு ஒருவர் தனியே அமர்ந்திருந்து உணவருந்துவதைக்  கண்டார். தம்முடன் சேர்ந்து உணவருந்த வருமாறு  அவரை அழைத்தார்.  அவ்வாறுவந்து ஒன்றாக உணவருந்த அமர்ந்த அந்த நபர்   மலேரியாக் காய்ச்சலால்  பிடிக்கப்பட்டவன் போல்  நடுங்கினார்.

அதனை மண்டேலாவின்  உதவியாளர்  மண்டேலாவிடம் சுட்டிக்காட்டிய போது  ""அவருக்கு உண்மையில் மலேரியா காய்ச்சல் இல்லை. இவர் சிறை அதிகாரியாக இருந்த போது நான் இவரிடம் குடிக்க தண்ணீர் கேட்டேன்.  அவர் எனக்கு  சிறுநீரை  கொடுத்தார்.
இப்போது ஜனாதிபதியாக இருக்கும் நான் தன்னை பழிவாங்குவேனோ  என்று  அஞ்சி  அவர் நடுங்கிறார்.""  என்று விளக்கினார் மண்டேலா.

வெள்ளையின ஆதிக்கத்திலிருந்து கறுப்பின மக்களுக்கு விடுதலை கிடைத்ததும்  தமக்குக்  தீங்கிழைத்த  வெள்ளை இன வெறியர்களை  பழிவாங்கும் படலத்தை கறுப்பின மக்கள் ஆரம்பித்தனர். அப்போது மண்டேலா பின்வருமாறு கூறி வெள்ளையின அழிப்பு  இரத்தக் களரியை நிறுத்துமாறு மக்களிடம் வேண்டினார்.

''என்னால் அவர்களை மன்னிக்க முடியுமென்றால்  உங்களால் அது  ஏன் முடியாது? ''     வெள்ளை இனவெறியர்களின்  கொடும் சிறைச்சாலையில் ,  அந்த இன வெறியர்களின் கையில் இருபத்தாறு ஆண்டுகளாக சித்திரவதை அனுபவித்த மண்டேலா இவ்வாறு மக்களைப் பார்த்து கேள்வி எழுப்பினார்

  இவ்வாறு வெள்ளை இன வெறியர்களின் கையில்  இருபத்தாறு வருட சிறை வாசத்தின் போது சித்திரவதைகளை அனுபவித்த மண்டேலாவினால்    அந்த  வெள்ளையர்கள்
உட்பட  அனைத்து மக்களுக்குமான தந்தைக்குரிய ஸ்தானத்துடன் நவீன தென்னாபிரிக்காவுக்கு  இவ்வாறு தலைமை தாங்க முடிந்தது.

60 வீத  தென் ஆப்பிரிக்க மக்களை   வீடற்ற  தெருவோர வாசிகளாக  விட்டுச் செல்வதாகக் கூறி தனது அந்திமக்  காலத்தில்  மக்கள் பற்றிய வேதனையுடன்தான்   மண்டேலா காலமானார்.   உண்மையிலேயே மண்டேலா     தென் ஆபிரிக்க மக்கள் பொறுத்து  அனைத்து மக்களுக்குமான தந்தைக்கும் தாய்க்கும்   உரிய ஸ்தானத்துடன்  காணப்பட்டார்.  இன்னொரு படி மேற்சென்று சொல்வதென்றால் அவர் தென்னாபிரிக்க மக்களின் தந்தையாக மட்டுமன்றி உலகலாவிய அனைத்து கறுப்பின மக்களின் விடுதலை வீரனாகவும் கறுப்பின மக்களின் கௌரவத்திற்கான குறுகியதாகவும்    விளங்கியதுடன்  உலகளாவிய    அர்த்தத்தில்  ஒடுக்கப்படும் இனங்களின் விடுதலை வீரனாகவும்  ஜனநாயகத்தின்   குரலாகவும்  விளங்குகிறார்.

மேற்கூறியபடி   தாய் யானை குட்டி யானையின் மீது காட்டும்  அன்புக்கும், அக்கறைக்கும் ,  பரிவுக்கும்  நிகராக  தேசபிதாக்களின் பாத்திரம் அமைய வேண்டியது அவசியம்.

ஆனால் இதற்கு நேர் எதிர்மாறாகத்   தன் இனத்தை உண்ணும்   தன்னின உண்ணிப்  பிராணிகளான  (Cannibals)  பாம்பினத்தைப் போல ,   தன்னின  குட்டிகளை  உண்ணும்  துருவக் கரடிகள் போல  காணப்படும்   தலைவர்களும் உலகில்  உண்டு.

முள்ளிவாய்க்கால் இரத்தத்தை குடித்து கொளுத்து  வாழும் தலைவர்களும்  தன்னினத்தை   விற்றுப்பிழைக்கும்  தலைவர்களும் தமிழ் மக்கள் மத்தியில் இல்லாமல் இல்லை.

முள்ளிவாய்க்காலின் பின்னான கடந்த 10 ஆண்டுகால தமிழ் அரசியலானது  தோல்வியின் வரலாற்றை   மீண்டும் கல்லுளி கொண்டு   எழுதியுள்ளது.

உண்மையான தந்தைக்கும் தாய்க்கும் உரிய  பாத்திரத்தை வகிக்கவல்ல தமிழ் தலைவர்களுக்காக தமிழினம் காத்துக்கிடக்கிறது.

விலைபோகும் தலைவர்களுக்கும், தன்னின உண்ணி தலைவர்களுக்கும், கண்மூடித்தனமான தலைவர்களுக்கும், முற்கற்பிதங்  கொண்ட   அறிவியற் பார்வையற்ற  தலைவர்களுக்கும்   பதிலாக  அறிவார்ந்த,  போர்க்குணமிக்க,  அர்ப்பணிப்புடன் செயற்படவல்ல  தந்தைதாய் இயல்புடன் தலைமை தாங்கவல்ல தலைவர்களுக்காக  தமிழினம் காத்துக் கிடக்கின்றது.  இது வெறும் கற்பனை அல்ல.  முள்ளிவாய்க்கால் பேரழிவும் பெரும் துயரமும்  இத்தகைய தலைவர்களை பிரசவிக்கவல்ல  உலைக் களமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

  ஆயினும்  வரலாற்றில் பேரழிவுகளுக்கு  உள்ளாகிக்  காணப்படக்கூடிய ஒரு சமூகம்  உடனடியாக  சீரழிவின் பின்னணியில்   வாழநேர்வது வரலாறு இயல்பு.  ஆதலால் அக்காலகட்டத்தில்  தற்காலிகமாக   புல்லுருவிகளும் குருவிச்சைகளும் முளைத்தெழுவதும்  வரலாற்றியல்பு.  அத்துடன கூடவே  தன்னின  உண்ணிப் பிராணிகளும்  தலையெடுக்கும்.  ஆனாலும் இவற்றை  எல்லாம் கடந்து கடினமான பாதையில் வரலாறு  முன்னேறி உள்ளதை   கடந்தகால வரலாறு  நிகழ்வுகள்   உலகெங்கும்  நிரூபித்துள்ளன.

இத்தகைய இரண்டக நிலையில் இவற்றை  எல்லாம்  கடந்து  புத்திபூர்வமாக  அரசியலை முன்னெடுக்கவல்ல தலைவர்களையும், அறிஞர்களையும் ,கலைஞர்களையும், ஊடகவியலாளர்களையும்,  பண்பாட்டுப் பணியாளர்களையும்   வேண்டித் தமிழினம் காத்துக்கிடக்கிறது.

முக்கிய தமிழ் தலைவர்கள்   எதிரிக்கு  சேவை செய்யும் வகையில்  தமிழ்  மக்களின் நலன்களுக்கு  எதிர் வளமாக  தம்மை நிரூபித்துள்ள நிலையில்
மாற்றுத் தலைமை  பற்றிப் பேசியவர்கள்  தம் மத்தியில் காணப்படும்  இழுபறிகளையும் இயலாமைகளையும்  கடக்கவல்ல வகையில்  தம்மை சுயவிமர்சனம் செய்து , புடமிட்டு ஐக்கியப்பட்ட பலம்வாய்ந்த இடைக் காலத் தமிழ் தலைமையை உருவாக்கத் தவறினால் தமிழ் மக்களை தோல்வியிலும் அழிவிலுமிருந்து மீட்க உடனடியாக வேறு வழி எதுவும் இல்லை.


தூரத்து இடி முழக்கம் என நீண்டகால  பெரும்  இலட்சியங்களை பற்றிப் பேசி  அவற்றின் பெயரால் அடிபட்டு துண்டு படுவதற்கு பதிலாக  உடனடி இருப்பை நிலைநாட்ட வல்ல சாத்தியமான   குறுங்கால  இலக்குகளை அடையவல்ல கொள்கைகளை   அடிப்படையாகக் கொண்டு  பரந்துபட்ட ஒரு பொது கூட்டுக்கு  அனைவரும் தயாராக வேண்டும்.  தற்போதைய உடனடி நிபந்தனை  சிங்கள குடியேற்றங்களை தடுப்பதும் அனைத்து வழிகளிலும்  பௌத்த  சிங்களமயமாக்கல்களுக்கு எதிராக போராடுவதுமாகும்.

இவ்வாறு உடனடிப் பிரச்சனைகளுக்காக நேரடிப் போராட்டங்களில் ஈடுபடுவதன் மூலமே  சிங்கள இன மயமாக்கலை தடுக்கவும் சர்வதேச கவனத்தை மேலும்  மேலும் தமிழ் மக்களின் பிரச்சினையின் பால் ஈர்க்கவும் முடியும்.

இப்போதைய பிரதான கேள்வி மாற்றுத்  தலைமை  பற்றிப் பேச்சுபவர்களைப் பார்த்தே  எழுகிறது . மேற்படி போராடுவதற்கு பொருத்தமான வகையில்   ஓர் இடைக்கால தலைமையாக பரந்துபட்ட    ஐக்கிய  முன்னணி ஒன்றை   உங்களால் உருவாக்க முடியுமா இல்லையா என்பது தான்  அந்தக் கேள்வியாகும்.  இந்த நெருக்கடி நிறைந்த இக்காலகட்டத்தில்  குறைந்தபட்சம்  ஒன்றுபட்ட  ஓர் இடைக்காலத் தலைமையையாவது  உருவாக்குவதற்கான ஆளுமையையும்   அறிவார்ந்த அணுகுமுறையையும் உங்களால் காட்ட முடியுமா? இல்லையா? 

-மு. திருநாவுக்கரசு-
06/02/2020

No comments