எம்.சி.சி வேண்டாம் இலங்கை: அக்கறையில்லை அமெரிக்கா?


அமெரிக்காவின் மில்லேனியம் ஷெலன்ஜர் கோப்பரேஷன் நிறுவனத்துடன், இலங்கை அரசாங்கம் கைச்சாத்திடவிருந்த ஒப்பந்தத்தில், இனி கையொப்பமிடப் போவதில்லை என்று, அமைச்சரவை தீர்மானித்துள்ள நிலையில் அதனை பொருட்படுத்த போவதில்லையென அமெரிக்க தூதுவராலய வட்டாரங்கள் தெரிவித்தன.

நேற்று (27) கூடிய அமைச்சரவைக் கூட்டத்தின் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் எம்.சி.சி ஒப்பந்தம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் இடைக்கால அறிக்கைப் பிரகாரமே, இந்தத் தீர்மானத்துக்கு அரசாங்கம் வந்துள்ளது.

குறித்த ஒப்பந்தத்தின் ஊடாக, மீளப் பெறப்படாத வகையில், 480 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (85 பில்லியன் ரூபாய்) நிதி உதவி கிடைக்கப்பெற இருந்ததாகவும் இது, 447.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியாகவும் 32.5 மில்லியன் டொலர்கள் சேவையாகவும் வழங்கப்படவிருந்தன.

“இந்த நிதியுதவியானது, பிரதான இரு வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்காகவே வழங்கப்படவிருந்தன என்றும் அவற்றில் ஒன்று போக்குவரத்து வேலைத்திட்டமென்றும் இது, மத்திய சுற்றுவட்ட வலையமைப்பாக  உள்ளகப் பிரதேச வீதிகளை நவீனமயமாக்கல், போக்குவரத்து நெரிசலை முகாமைத்துவம் செய்தல், பொதுப் போக்குவரத்து பஸ் சேவையை நவீனமயமாக்கல், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காக, முகாமைத்துவ அலுவலகமொன்றை நிறுவுதல் போன்றன மேற்கொள்ளப்படவிருந்தன.

“இரண்டாவது வேலைத்திட்டமாக, காணி விவகாரம் அமைந்துள்ளதோடு, இதன் கீழ், தெரிவு செய்யப்படும் 12 மாவட்டங்களில், அரச மற்றும் தனியாருக்குச் சொந்தமான காணிகளை அளவிட்டு, அக்காணிகளுக்கு உரிய உறுதிப் பத்திரங்கள் இல்லாவிடின், அவற்றுக்கான உறுதிப் பத்திரங்களை வழங்குதல், அந்த உறுதிப் பத்திரங்களை, டிஜிட்டல் முறைமைக்குள் கொண்டுவருதலே, இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாக இருந்தது.

“இருப்பினும், இந்த ஒப்பந்தத்தின் கீழ் நிதியுதவியைப் பெற்றுக்கொள்வதற்கு சில நிபந்தனைகள் உள்ளன. பொருளாதாரச் சுதந்திரம், நியாயமான நிர்வாகம், பொதுமக்களுக்கான முதலீடுகள் என்பனவையே அவையாகும். எவ்வாறாயினும், இது பற்றி ஆராய்ந்த குழு, தனது இடைக்கால அறிக்கையில், இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதால், இலங்கையின் இறையாண்மைக்குப் பிரச்சினைகள் ஏற்படுவதாகச் சுட்டிக்காட்டியுள்ளது. இதனால், இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதில்லை என்று, அரசாங்கம் முடிவெடுத்துள்ளது” என்றும் தெரிவித்துள்ளது.

ஆயினும் இத்தகைய காணி கண்காணிப்பு நடவடிக்கைகள் மூலம் எல்லைக்கிராமங்கள் டிஜிற்றல் மயப்படுத்தப்படுவதுடன் இது திட்டமிட்ட நில ஆக்கிரமிப்பபை கண்காணிக்குமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனிடையே இராணுவத்தளபதிக்கான பயணத்தடை இத்தகைய நிலைப்பாட்டிற்கு இலங்கையினை தள்ளுமென எதிர்பார்க்கப்பட்டதாகவும் அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.










No comments