மாமனிதராக சந்தியோகு ஜேசுதாசன் அவர்கள் மதிப்பளிப்பு

08.02.2020

சந்தியோகு ஜேசுதாசன் அவர்கள் ‘‘மாமனிதர்’’ என மதிப்பளிப்பு.


தமிழீழ மண்ணையும், மக்களையும் ஆழமாக நேசித்து  எமது விடுதலைப் போராட்டத்திற்குப் பெரும்பணியாற்றிய கலைஞர் திரு. முல்லை ஜேசுதாசன் (சாமியப்பா) அவர்களை 07.02.2020 அன்று தமிழீழத் தேசம் இழந்துநிற்கின்றது. தமிழர் மனங்களிலெல்லாம் தனது கலைப்படைப்புக்களுக்கூடாகப் போராட்டம் பற்றிய உன்னத கருத்துக்களைக் கொண்டுசென்றவரை இன்று நாம் இழந்துநிற்கின்றோம்.

இவர் எழுத்தாளர், நடிகர், இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் எனப் பல்துறை ஆளுமைமிக்க படைப்பாளியாக மக்கள் மனங்களில் இடம் பிடித்தது மட்டுமன்றி தாயகத்தின் கலைபண்பாட்டுக்கழகம், நிதர்சனம், தமிழீழத் தேசியத்தொலைக்காட்சி, புலிகளின் குரல், ஈழநாதம் பத்திரிகை, வெளிச்சம் இதழ் என்பவற்றிற்கூடாக விடுதலைவேட்கையை மக்களிடையே கொண்டுசென்றவர்.

‘‘நீலமாகிவரும் கடல்’’ என்ற சிறுகதைத் தொகுப்பு நூல் இவரது எழுத்தாற்றலுக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக அமைகின்றது.
தமிழீழத்தில் பல குறும்படங்களை இயக்கியும், நடித்தும் எமது போரியல் வாழ்வை வெளிக்கொணர்ந்த விடுதலைப் படைப்பாளியாவார். இவர் இயக்கிய ‘‘செவ்வரத்தம் பூ’’ என்ற குறும்படத்திற்காக தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பாராட்டுதலையும், மதிப்பளிப்பையும் பெற்றவர்.

தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றையும், எம்மக்களின் வலிசுமந்த வாழ்வியலையும் தனது படைப்புக்களுக்கூடாக பதியமிட்டுள்ளமை என்பது இன்றைய படைப்பாளிகளுக்கு எதிர்கால வரலாற்றைச் சுட்டிநிற்கின்றது.

பல இடர்களையும், துன்பங்களையும் சந்தித்த வேளையிலும் அடக்கமாகவும், அமைதியாகவும், எளிமையாகவும் வாழ்ந்த கலைத்தேடல் மிக்கவரை இழந்துநிற்கின்றோம். இவரது இழப்பில் தவிக்கும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களின் துயரத்தில் நாமும் பங்கெடுத்துக் கொள்வதுடன்  கலைஞர் முல்லை ஜேசுதாசன் அவர்களின் இனப்பற்றிற்கும்,  இவர் ஆற்றிய விடுதலைப் பணியினையும் மதிப்பளித்து ‘‘மாமனிதர்’’ என்ற அதியுயர் தேசியவிருதை வழங்குவதில் நாம் பெருமையடைகின்றோம்.

சத்திய இலட்சியத்திற்காக வாழ்ந்த உயர்ந்த மனிதர்களைச் சாவு என்றும் அழித்துவிடுவதில்லை. சரித்திர நாயகர்களாக எமது தேசத்தின் ஆன்மாவில் அவர்கள் என்றும் வாழ்வார்கள்.

                               “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

அனைத்துலகத் தொடர்பகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.
No comments