பாதுகாப்பு அமைச்சரை நியமிப்பதில் சகோதர மோதலா?

தேசிய பாதுகாப்பு தொடர்பாக அதிகமாக கருத்து வெளியிடும் அரசாங்கம், இன்னமும் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள பாதுகாப்பு அமைச்சரை நியமிக்காமல் இருப்பதானது பாரதூரமான விடயம் என்று ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
நாடாளுமன்றில் நேற்று (22) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் இதனை தெரிவித்தார். மேலும்,
அரசாங்கமொன்று இன்று புதிதாக ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. எனினும், பாதுகாப்பு அமைச்சராக இன்றுவரை எவரும் நியமிக்கப்படவில்லை.
அமைச்சர்கள் நியமிக்கப்பட்ட போது, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு பாதுகாப்பு அமைச்சு வழங்கப்படும் என்று கூறப்பட்டாலும், இன்றுவரை அவ்வாறு இடம்பெறவில்லை.
ஆனால், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக சமல் ராஜபக்ஷ மட்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இது பாரதூரமான விடயமாகும். எனவே, யார் பாதுகாப்பு அமைச்சர் என்பதை அரசாங்கம் உடனடியாக அறிவிக்க வேண்டும்.
19 ஆவது திருத்தச்சட்டத்திற்கு அமைவாக பாதுகாப்பு அமைச்சை ஜனாதிபதி தன்னகத்தே வைத்துக் கொள்ள முடியாது. அப்படி அவர் இந்த அமைச்சை வைத்திருந்தால், அது முற்றிலும் அரசமைப்புக்கு முரணான ஒன்றாகவே கருதப்படும்.
பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இல்லாமல் பாதுகாப்புச் செயலாளர் மட்டும் எவ்வாறு நியமிக்க முடியும்? 10 வருடங்களுக்கு முன்னர் நாட்டில் யுத்தம் இடம்பெற்றபோது, அன்று ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷ பாதுகாப்பு அமைச்சராக இருந்துள்ளார்.
இந்த நிலையில், இப்போது இந்த அமைச்சுப் பதவியை அவருக்கு வழங்காமல் இருப்பதன் நோக்கம் என்ன? சகோதரர்களுக்குள் ஏதேனும் சந்தேகங்கள் வந்துவிட்டதா?
ஏதேனும், சிக்கல்கள் இருந்தால் உடனடியாக இதனை நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டும். இந்த அமைச்சுப் பதவி வெற்றிடமாக இருப்பது, இலகுவான விடயமல்ல.
இராஜாங்க அமைச்சர் ஒருவர் அமைச்சரவைக்கு பொறுப்புக் கூறமாட்டார். இது ஒட்டுமொத்த நாட்டின் தேசிய பிரச்சினையாகும். நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எவர் பொறுப்பானவர் என்பதை உடனடியாக அரசாங்கம் அறிவிக்க வேண்டும் – என்றார்.

No comments