தை மாதத்தை பிரித்தானியாவில் மரபுரிமை மாதமாக அங்கீகரிக்க ஆதரவு கோரும் அங்குரார்ப்பண நிகழ்வு


18-01-2020

ஊடக அறிக்கை

அன்பான பிரித்தானிய வாழ் தமிழ் மக்களே!


எமது தாய் மொழியான தமிழின் தொன்மையையும், ஆழமான பரந்த கலை, இலக்கிய பண்பாட்டையும் அறிந்துதான் அதற்க்கு “செம்மொழி” என்ற உயரிய மதிப்பை ஐக்கிய நாடுகள் அளித்தது.

தமிழ் என்பது எமக்கு மொழி மட்டுமல்ல. அது எமது வாழ்க்கை முறை. அது எமது அடையாளம். அதனைப் பேணிப் பாதுகாத்து அதன் பெருமையை உலகறியச் செய்ய வேண்டியதும், எமது இளைய தலைமுறையும் எதிர்கால சந்ததியும் “நாம் தமிழர்” என்று பெருமையுடன் கூற வைப்பதுவும் எங்கள் எல்லோருடையதும் வரலாற்றுக் கடமை

அந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு தை மாதத்தை மரபுரிமை மாதமாக எம்மக்கள் ஏற்றுக் கொண்டு, பிரித்தானிய மக்களாலும் பாராளுமன்றத்தினாலும்  அங்கீகரிக்கப்பட்டு பிரகடனப்படுத்தப் படுவதற்கான வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக ஒரு பிரமாண்டமான அங்குரார்ப்பண நிகழ்வை நாம் வரும் 18_ம் திகதி சனிக்கிழமை RAYNERS LANE இல் நடாத்துகின்றோம்.

எமது இந்த மரபுரிமைத் திங்கள் திட்டத்திற்கு முன்னோடியாக இருந்தவர்கள் கனடா வாழ் தமிழ்மக்கள் என்பதை பெருமையுடன் கூறிக்கொள்கிறோம்.

கனடா ஒரு குடியேற்ற நாடாக இருந்தபோதிலும், விகிதாசார அடிப்படையில் அங்கு தமிழ் மக்கள் கணிசமான எண்ணிக்கையில் இருந்தபோதிலும், கனேடியத் தமிழ் உணர்வாளர்கள், செயற்ப்பாட்டாளர்களின் நீண்டகால கடின உழைப்பாலும்,
ஒன்றிணைந்த செயற்ப்பாட்டாலும்தான் 2016_ம் ஆண்டில் தை மாதத்தை தமிழ் மரபுரிமை மாதமாக  கனேடிய பாராளுமன்றம் அங்கீகரித்து பிரகடனம் செய்தது.

பிரித்தானியாவிலும் அந்த திட்டத்தை செயற்படுத்தும் முகமாக நாம் அவர்களை    அணுகியபோது அவர்கள் தம் அனுபவங்களை எம்மோடு பகிர்ந்து கொண்டது மட்டுமல்லாமல், எமது முயற்சிக்கு முழு ஆதரவு தந்து ஊக்குவித்தார்கள்.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை தை மாதம் என்பது ஒரு முக்கியமான மாதம். தை பிறந்தால் வழி பிறக்கும்! என்பது தமிழர் நம்பிக்கை.

இந்த மாதத்தில்தான் இயற்கைக்கு நன்றி கூறி பொங்கல் விழா எடுப்பது எமது மரபு. அந்த வகையில் பிரித்தானியாவிலும் பல சமூக அமைப்புக்கள், ஆலயங்கள், வர்த்தக நிறுவனங்கள், பாடசாலைகள் என தைப் பொங்கலை விமரிசையாக கொண்டாடி
வருவது நாம் அறிந்தது.

ஆனால் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாதத்தில் வெறுமனே பொங்கல் விழாவோடு நிறுத்தாமல் தமிழ் மரபு சார்ந்த நிகழ்ச்சிகளை தை மாதம் முழுவதும் நடாத்தும்போது எமது கலை, கலாச்சார பண்பாடு மேலும் மெருகூட்டப்படவும், எமது இளைய தலைமுறையினரின் ஈடுபாடும் பங்களிப்பும் அதிகரிக்கவும், ஏனைய இனமக்கள் தமிழ்
மக்களின் சிறப்பை அறிந்து கொள்ளவும் வாய்ப்பளிக்கும் என்பது எமது நம்பிக்கை.

மரபுரிமை மாதம் என்பது தனியே எந்த ஒரு அமைப்பிற்கோ அல்லது நிறுவனத்திற்கோ உரித்தானதல்ல. இது ஒவ்வொரு தமிழனுக்கும், தமிழர் சார்ந்த அமைப்புகளுக்கும் பொதுவானது.

அரசியல், சமய, வர்க்க முரண்பாடுகளுக்கு அப்பால்பட்டு ‘தமிழால்’ அனைவரையும் ஒன்றிணைய வைப்பது. அந்தப் புரிந்துணர்வோடு கடந்த பல மாதங்களாக இதற்கான ஆயத்த வேலைகளில் நாம் ஈடுபட்டிருந்தோம்.

பிரித்தானியாவில் மரபுத் திங்கள் அங்கீகாரத்திற்கான இந்த ஆரம்ப நிகழ்வை நாம் முன்னின்று ஒழுங்கு படுத்தினாலும் இது எமது தனிப்பட்ட முயற்சி மட்டுமல்ல.பிரித்தானியாவிலுள்ள பல சமய, சமூக, கல்வி, கலை சார்ந்த பல பொது அமைப்புக்களோடு நாம் தொடர்பு கொண்டு அவர்களின் அனுசரணையோடும், ஆதரவோடும்தான் இந்த மாபெரும் அங்குரார்ப்பணப் பெருவிழா நிகழ்த்தப்படுகின்றது.

இந்த வருடம் முதல் தை மாதத்தை “தமிழ் மரபுரிமை மாதத்தின்” தொடர்ச்சியான கொண்டாட்டங்களாக தொடர வேண்டும் என்ற எமது வேண்டுதலுக்கமைய,  சில அமைப்புக்களும் நிறுவனங்களும் தமது வழமையான பொங்கல் விழாவைக் கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல் இம்முறை ‘தை மாதத்தை தமிழ் மரபுத் திங்களாக அறிவித்தது எமக்கு உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கின்றது.

நன்றி
பிரித்தானிய தமிழர் வர்த்தக சம்மேளனம்.

No comments