கடத்தல் வழக்கை முடிக்கப்பார்க்கும் கோத்தாவை கண்டித்தார் சுமந்திரன்

11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் இருந்து முன்னால் கடற்படை தளபதி வசந்த கரன்னகொட மற்றும் கடற்படையின் முன்னால் பேச்சாளர் டி.கே.பி. தஸநாயக்க ஆகிய இருவரையும் வழக்கில் இருந்து விடுதலை செய்யுமாறு அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு பணிப்புரை வழங்கியிருப்பது சட்ட விரோதமானது என்று கண்டிப்பதோடு இதற்கு எதிராக சட்ட நடவடிக்கைக்கு செல்லவுள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த ர்.

யாழ்ப்பாணத்தில் இன்று (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும்,

11 இளைஞர்கள் கொழும்பில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் சம்பந்தமாக விசேட மேல் நீதிமன்ற அமர்வில் பல இராணுவ, கடற்படை புலனாய்வாளர்கள், தளபதிகள் குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கு. இந்த வழக்கு சில தினங்களுக்கு முன்னர் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போது, குற்றப்பத்திரிகை சமர்பிக்க வேண்டாம். இது தொடர்பில் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு ஒரு பணிப்புரை விடுக்க உள்ளது. ஆணைக்குழு என்ன பணிப்புரை விடுக்க இருக்கிறது என்பதை தெரிந்துகொண்டு விசாரணையினை முன்னெடுக்கலாம் என்று எதிரிகள் தரப்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றத்திற்கு தெரிவித்திருக்கிறார்கள். ஆனாலும் நீதிமன்றம் அதனை ஏற்க மறுத்தது. குற்றப்பத்திரங்களை எதிரிகளுக்கு சமர்ப்பித்திருந்தது.

அன்றைய வழக்கு தவணையின் போது முக்கிய எதிரி முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட நீதிமன்றில் ஆஜராகவில்லை. அவருக்கு குற்றப்பத்திரம் வழங்கப்படவில்லை. அடுத்த தவணைக்கு சமூகம் அளிக்கும்படி தகவல் வழங்குமாறு உத்தரவு பிறப்பிக்கபட்டது.

இது நடந்து சில நாட்களுக்குள்ளே நேற்றைய தினம் (27) அரசியல் பழிவாங்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு சட்டமாஅதிபர் திணைக்களத்திற்கு ஒரு அறிவித்தலை கொடுத்திருக்கிறது. முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னகொட மற்றும் கடற்படையின் முன்னாள் ஊடக பேச்சாளர் டி.கே.பி. தஸநாயக்க ஆகிய இருவரையும் வழக்கில் இருந்து விடுதலை செய்யுமாறு சிபார்சு செய்து ஒரு அறிவித்தலை சட்டமா அதிபருக்கு கொடுத்துள்ளது. இது ஒரு மோசமான அரசியல் தலையீடு. சட்டமாஅதிபர் திணைக்களம் சுயாதீனமாக இயங்குகிற திணைக்களம்.

வழமையா சட்டமா அதிபர் திணைக்களம் அரச இயந்திரமாக அல்லது அரசின் கைக்கூலியாக இயங்குகிறது என்ற குற்றச்சாட்டைத் தான் நாங்கள் முன்வைப்போம். ஆனால் இங்கே சட்டமா அதிபர் முன்னெடுத்த ஒரு வழக்கைக் கூட ஜனாதிபதி ஆணைக்குழுவை வைத்து அவருடைய செயற்பாடுகளைத் தடுப்பதற்கான ஒரு முயற்சி நடைபெறுகிறது.

காணாமலாக்கப்பட்டவர்கள் விவகாரம் மிகப் பெரிய ஒரு விவகாரம். அதிலே நேரடிச் சாட்சியங்களோடு அரச படையினரிடத்திலே கையளிக்கப்பட்டவர்கள் ஆயிரம் ஆயிரம் பேர் இருக்கிறார்கள். அந்த ஒரு விடயமும் இன்னமும் நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவில்லை. – என்றார்.

No comments