ஆளுநரை சந்தித்தார் ஸ்ரீநேசன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளை தீர்க்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்திடம் தான் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தை ஆளுநர் அலுவலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் சந்தித்து கலந்துரையாடினார்.
இந்நிலையில் இந்த சந்திப்பு குறித்து கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் இதன்போது மட்டக்களப்பு மாவட்டம் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளை ஸ்ரீநேசன் ஆளுநரிடம் பட்டியலிட்டதாக குறிப்பிட்டார்.
முக்கியமாக மட்டக்களப்பு மேற்கு வலயம் எதிர்நோக்கும் ஆசிரியர் பற்றாக்குறையை ஆளுநர் கவனத்தில் எடுத்துக்கொண்டதாகவும் அதனை முடிந்தளவு விரைவாகத் தீர்த்து வைப்பதற்கு ஆளுநர் உறுதியளித்தாகவும் ஸ்ரீநேசன் நம்பிக்கை வெளியிட்டார்.
அத்துடன் மட்டக்களப்பில் இடம்பெறும் சட்டவிரோத மண் அகழ்வு பெரும் பிரச்சினையாக தலையெடுத்துள்ளதாகவும் இதனால் இயற்கைச் சமநிலை சீர்குலைக்கப்பட்டு இயற்கை இடர்கள் இடம்பெற வாய்ப்புள்ளதாகவும் ஸ்ரீநேசன் ஆளுநரிடம் விவரித்தார்.

No comments