தாக்குதலை கண்டித்தார் செல்வம்

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் இணைப்பாளர் கோ.ராஜ்குமார் மீதான தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது என்பதுடன் அதனை வன்மையாக கண்டிப்பதாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
இன்று (புதன்கிழமை) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, “காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தமது பிள்ளைகளை தொலைத்துவிட்டு கடும் மன வேதனையுடன் 1040 நாட்களையும் கடந்து வீதியோரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமது பிள்ளைகளையும் தமது கணவனையும் யுத்த காலத்தில் இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களும் வெள்ளை வான் கடத்தலில் பறி கொடுத்தவர்களுமாக தமது எதிர்காலம் தொடர்பிலேயே சிந்திக்க முடியாத துர்ப்பாக்கிய நிலைக்குள் அவர்கள் இன்று தள்ளப்பட்டுள்ளனர்.
இதுவரை அரசாங்கங்கள் எவ்வித நீதியையும் அவர்களுக்கு வழங்காத நிலையில் அவர்கள் தமது எதிர்ப்பினை பல்வேறு வடிவில் வெளிப்படுத்தி வருகின்றனர்.
அவர்களின் உணர்வினையும் மன வேதனையையும் உணர்ந்து அரசியல் தலைவர்கள் என்ற வகையிலும் அரசியல் கட்சிகள் என்ற வகையிலும் அவர்களது கருத்தியல் ரீதியான செயற்பாடுகளுக்கு நாம் தலைசாய்க்கின்றோம்.
எம் மீதும் அவர்கள் பல்வேறான எதிர் செயற்பாட்டை வெளிப்படுத்தியிருந்த போதிலும் நாம் மௌனமாக அவர்களது உணர்வுக்கு மதிப்பளித்திருந்தோம்.
எனினும் இவ்வாறான ஒரு செயற்பாட்டை கருத்தியலால் மோத முடியாதவர்கள் அவர்களது இணைப்பாளரை துரத்திச்சென்று கண்மூடித்தனமாக வீதியோரத்தில் பலர் சேர்ந்து தாக்கியுள்ளமை வருந்தத்தக்க விடயம் என்பதுடன் கண்டிக்கத்தக்கதுமாகும். - என்றார்.

No comments