நீதிமன்றை அச்சுறுத்திய கடத்தல் கடற்படை வீரர்கள் கைது

தமிழர்கள் உள்ளிட்ட 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு தொடர்பில் நீதிமன்றை அவமதித்து, சாட்சிகளை அச்சுறுத்தும் விதமாக குறித்த வழக்கின் எதிரிகள் சார்பு சட்டத்தரணியும் முன்னாள் இராணுவ மேஜருமான அஜித் பிரசன்னவுடன் இணைந்து ஊடக சந்திப்பை நடத்திய குறித்த வழக்கின் கடத்தல் சந்தேக நபர்களான கடற்படை வீரர்கள் இருவரை விளக்கமறியலில் வைக்க நேற்று (31) கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

11 இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கின் சந்தேக நபர்களான கடற்படையை சேர்ந்த துஷார மென்டிஸ், கஸ்தூரிகே காமினி ஆகியோர் மேஜர் அஜித் பிரசன்னவுடன் இணைந்து கடந்த மாதம் 9ம் திகதி நடத்தி ஊடக சந்திப்பில்,

நீதிபதிகள், சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள், பொலிஸார், சாட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சார்பிலான சட்டத்தரணிகள் ஆகியோருக்கு எதிராக கருத்துக்களை முன்வைக்கப்பட்டது.

இந்நிலையிலேயே அஜித் பிரசன்ன கைது செய்யப்பட்டு மறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், துஷார மென்டிஸ், கஸ்தூரிகே காமினி ஆகியோரும் கைது செய்யப்பட்டு மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை இந்த விவகாரத்தில் மறியலில் உள்ள அஜித் பிரசன்ன மற்றும் ஏனைய இருவர் உட்பட மேலும் இரண்டு பேரையும் நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறு சிஐடியின் பணிப்பாளருக்கு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவ்வாறு குறித்த உத்தரவுக்கு அமைய செயற்படத் தவறினால் சிஐடியின் பணிப்பாளர் மன்றில் நேரடியாக ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் எனவும் கொழும்பு மேலதிக நீதிவான் பிரியந்த லியனகே தனது உத்தரவில் குறிப்பிட்டார்.

No comments