வவுனியா 1070:கோத்தாவே பதில் சொல்லவேண்டும்?


காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளிற்கான நீதி கோரிய போராட்டம் இன்றுடன் வவுனியாவில் 1070வது நாளை கடந்துள்ளது.போராட்ட களத்திலுள்ள தாய்மாரின் ஒரு நாளைக்கு ஒரு நேர உணவுத்தவிர்ப்பு போராட்டம் தொடர்கிறது.

இதனிடையே காணாமல் போயுள்ளவர்கள் யுத்தத்தில் ,றந்துவிட்டார்கள் என்று கூறியுள்ள ஜனாதிபதி காணாமல் போயுள்ளவர்கள் எங்கே, எப்போது, யாரால் கொல்லப்பட்டார்கள் என்பதனையும் எந்த விசாரணையின் அடிப்படையில் அவர் இதனை கூறியிருக்கிறார் என்பதையும் ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கும் சர்வதேச சமூகத்துக்கும் நாட்டு மக்களுக்குங் கூறவேண்டும் என முன்னாள் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

விசாரணை ஒன்றை நடத்தியிருந்தால் அது எப்போது, யாரால் நடத்தப்பட்டது என்பதனையும் அவர் வெளிப்படுத்தவேண்டிய பொறுப்புக்கு தற்போது உள்ளாகியிருக்கின்றார். 

இறுதி யுத்தத்தில் 20,000 க்கும் அதிகமான மக்கள் காணாமல் போயுள்ளனர் என்பது யாவரும் அறிந்ததே. அவர்கள் யுத்தத்தில் இறந்துவிட்டார்கள்  என்று ஜனாதிபதி கூறியிருப்பது இறுதி யுத்தத்தில் நடைபெற்ற போர்குற்றங்கள் மற்றும் மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணை நடத்தப்படவேண்டும் என்ற ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கோரிக்கையினை நியாயப்படுத்தியுள்ளது. 

காணாமல் போனவர்களில் மூன்று வகையானவர்கள் இருக்கிறார்கள். முதலாவது வகையினர் யுத்தத்தின் போது காணாமல் போனவர்கள். இரண்டாவது வகையினர் யுத்த வலயத்துக்கு அப்பால் காணாமல் ஆக்கப்பட்டவர்கள். மூன்றாவது வகையினர் யுத்தம் முடிந்த பின்னர் இராணுவத்தில் பொறுப்புள்ள அதிகாரிகளின் வேண்டுகோளை ஏற்று சரண் அடைந்தவர்கள் அல்லது பெற்றோர் உறவினர்களினால் ஒப்படைக்கப்பட்டவர்கள்.

இவர்கள் அனைவருமே இறந்துவிட்டார்கள் என கூறியுள்ள ஜனாதிபதியே யுத்தம் நடைபெற்றபோது பாதுகாப்புச் செயளாலராக இருந்ததுடன்  தானே யுத்தத்தை வழிநடத்தி முடிவிற்கு கொண்டுவந்ததாக பல தடவைகள் கூறியிருப்பதால் அவரின் கூற்றில் உண்மையிருக்கக்கூடும். 

ஜனாதிபதி தாம் நடத்திய விசாரணை பற்றிய முழு விபரங்களையும் முதலில் வெளிப்படுத்த வேண்டும் அல்லது அவ்வாறு அவர் நம்பத்தகுந்த விசாரணை எதனையும் நடத்தவில்லையானால் சர்வதேச விசாரணை ஒன்றுக்கு அவர் வழிவகுக்க வேண்டும். அக்கால கட்டத்தில் போர் முடிந்த பின்னர் எமக்குக் கிடைத்த தகவலின் படி இராணுவத்தினரே மக்களைச் சரணடையச் சொன்னார்கள் .இராணுவத்தினர் அவர்களைப் பாரம் எடுத்தார்கள் என்றும் கூறப்பட்டது. அப்படி என்றால் பாரமெடுத்த இராணுவத்தினரைக் கூப்பிட்டு அவர்கள் பொறுப்பேற்றவர்களுக்கு என்ன நடந்தது என்று ஏன் கேட்கவில்லை என்பதையும் ஜனாதிபதி; தெளிவுபடுத்த வேண்டும் எனவும் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

No comments