பழிக்கு பழி! கங்காருகளை தோற்கடித்தது இந்தியா!

சுற்றுலா அஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று (17) ராஜ்கோட் மைதானத்தில் இடம்பெற்றது.

இந்தப்போட்டியில் இந்திய அணியின் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு கைகொடுக்க இந்திய அணி 36 ஓட்டங்களினால் வெற்றி பெற்று தொடரை 1-1 எனச் சமப்படுத்தியுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி தமது 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 340 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்படி இந்திய அணியின் துடுப்பாட்டத்தில் சிகார்த் தவான் 96 ஓட்டங்களையும் அணியின் தலைவர் விராட் கோஹ்லி 78 ஓட்டங்களையும் லோகேஷ் ராகுல் 80 ஓட்டங்களையும் ரோஹித் சர்மா 42 ஓட்டங்களையும் பெற்று சிறப்பித்திருந்தனர்.

அவுஸ்திரேலியாவின் பந்துவீச்சில் அடம் சம்பா 3 விக்கெட்டுகளையும் ரிச்சர்ட்சன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர்.

இதன்படி 341 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 49.1 ஓவரில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 304 ஓட்டங்களை மட்டுமே பெற்று 36 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

அவுஸ்திரேலியாவின் துடுப்பாட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் இரண்டு ஓட்டங்களினால் சதத்தை தவறவிட்டு 98 ஓட்டங்களையும், எம்.லபுக்ஷக்னே 46 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

இதேவேளை இந்திய அணியின் பந்துவீச்சில் மொஹமட் ஷமி 3 விக்கெட்களையும் நவ்தீப் சைனி, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோர் இவ்விரண்டு விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தனர்.

No comments