மீண்டும் இந்தியாவிடம் வீழ்ந்தது நியூசி

சுற்றுலா நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ரி-20 தொடரின் நான்காவது போட்டி இன்று (31) இடம்பெற்றது.

இந்தப் போட்டியும் சமநிலையில் முடிவுற்ற நிலையில் சுப்பர் ஓவர் மூலம் இந்திய அணி வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணி சார்பில் மனிஷ் பாண்டே (50), லோகேஷ் ராகுல் (39) ஓட்டங்களை பெற்றனர். நியூசிலாந்தின் பந்துவீச்சில் சோதி 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

இந்தநிலையில் 166 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதன்மூலம் மூன்றாவது போட்டியை போல் இந்த போட்டியும் சமநிலையில் முடிவுற்றது.

அணி சார்பில் கொலின் முன்ரோ (64), செய்பேர்ட் (57) ஓட்டங்களைப் பெற்று இருந்தனர். இந்திய அணியின் பந்துவீச்சில் சர்தல் தாகூர் 2 விக்கெட்களை வீழ்தினார்.

இந்த நிலையில் சுப்பர் ஓவர் மூலம் முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 6 பந்துகளில் 13 ஓட்டங்களை பெற்றிருந்தது. இதன்படி வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 5 பந்துகளில் 16 ஓட்டங்களை பெற்று வெற்றி வாகை சூடியது.

No comments