அவதூறு பரப்பியதாக ரஜினி மீது வழக்கு!

துக்ளக் பத்திரிக்கையின் 50- வது ஆண்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த 14 ஆம் தேதி   நடைபெற்றது.  இந்த விழாவில் துணை குடியரசு தலைவர் வெங்கைய்யா  நாயுடு, நடிகர் ரஜினிகாந்த்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மோடி காணொளி மூலம் சோ குறித்து பேசினார்.

அப்போது பேசிய ரஜினிகாந்த், ' சோ மீது உள்ள மரியாதையால் தான் பிரதமர் துணைக்குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு இந்த விழாவில் பங்கேற்கின்றனர். முரசொலி வைத்திருந்தால் திமுகவினர் என சொல்லிவிடலாம் ஆனால் துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்பார்கள்' என்றும் 'பெரியார் தலைமையில் ராமர், சீதை உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது, அந்த சிலைகளுக்கு  செருப்பு மாலை போடப்பட்டது என்றும் பேசினார். இதற்கு கடும் எதிர்ப்பு  கிளம்பியுள்ளது.

இந்நிலையில் கோவை திராவிடர் விடுதலைக் கழகம் தலைவர் நேருதாஸ் சார்பில் கோவை காவல்துறை ஆணையரிடம் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அதில்,'கடந்த 14ஆம் தேதி சென்னையில் நடந்த துக்ளக் இதழின் ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் 1971 ஆம் ஆண்டு சேலத்தில் தந்தை பெரியார் நடத்திய பேரணியில் ராமன் சீதை ஆகிய இடங்களில் நிர்வாணமாக எடுத்துச் செல்லப்பட்டது என்ற ஒரு பொய்யான தகவலைப் பரப்பி தந்தை பெரியாரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு  வதந்தியை பரப்பி பொது அமைதியைக் குலைக்கும் நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்' என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

No comments