உளவுத்துறையை நவீனப்படுத்த இந்தியா 50 மில்லியன் டாலர் உதவி!


இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று சனிக்கிழமை மதியம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷேவை கொழும்பில் சந்தித்துப் பேசியிருக்கிறார். இந்த சந்திப்பின் போது பயங்கரவாத எதிர்ப்பு, உளவுத்துறை ஒத்துழைப்பு மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளன. மேலும், அதிநவீன உளவுத்துறை கருவிகளை வாங்குவதற்காக இந்தியா சார்பாக இலங்கைக்கு 50 மில்லியன் டாலர் உதவியை தோவல் உறுதி செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் பாஜகவின் கூட்டணியில் உள்ள பாமக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (ஜனவரி 19) ட்விட்டரில் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “இலங்கை ராணுவத்துக்கு பாதுகாப்பு கருவிகளை வாங்க 50 மில்லியன் டாலர் நிதி வழங்கப் படும் என்று இந்திய அரசு அறிவித்திருப்பது ஈழத்தமிழர்களுக்கு எதிரான செயல் ஆகும். இந்த நிதியை ஈழத்தமிழர்களை ஒடுக்குவதற்காக சிங்கள அரசு பயன்படுத்தும் ஆபத்து உள்ளது” என்று அச்சம் தெரிவித்துள்ளார்.
ஈழத்தமிழர் நலன், தமிழக மீனவர்கள் பாதுகாப்பு குறித்து இந்தியாவுக்கு அளித்த உறுதியை இலங்கை காப்பாற்றவில்லை. ஒன்றரை லட்சம் ஈழத்தமிழர் படுகொலை குறித்த போர்க்குற்ற விசாரணைக்கும் இலங்கை ஒத்துழைக்கவில்லை. இத்தகைய சூழலில் இலங்கைக்கு பாதுகாப்பு கருவி வாங்க இந்தியா உதவ வேண்டிய தேவை என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ள ராமதாஸ்,
“ஈழத்தமிழர்கள் படுகொலை விவகாரத்தில் இலங்கை அரசு குற்றவாளி. தண்டிக்கப்பட வேண்டிய நாடு. அத்தகைய நாட்டுக்கு இந்தியா 50 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்குவது போர்க்குற்றத்திற்கான வெகுமதியாகவே அமையும். எனவே, இலங்கைக்கு இந்தியா எந்த உதவியும் வழங்கக் கூடாது” என்றும் வலியுறுத்தியுள்ளார்.

No comments