ஒரே குடும்பம் மாண்டு போக காரணமான சீன நிறுவனம்; அனுமதி இரத்து

நுவரெலியா - வலப்பனை, மலபட்டாவ பிரதேசத்தில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த பகுதியில் உள்ள கற்குவாரிக்கான அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்பட்டுள்ளது.

குறித்த இடத்தில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட மண்சரிவால் நால்வர் மண்ணுள் புதையுண்டதுடன், அவர்களில் மூவர் சடலமாக மீட்கக்கப்பட்டனர்.

மேலும் ஒருவரை மீட்கும் பணி 3ஆவது நாளான நேற்றும் (03) தோல்வியுற்ற நிலையில், நேற்று மாலையுடன் தேடும் பணிகளை நிறைவு செய்ததாக நுவரெலியா மாவட்ட இராணுவத்தின் பிரதானி மேஜர் அசித்த ரணதிலக்க தெரிவித்தார்.

இந்நிலையில், மண்சரிவு இடம்பெற்ற இடத்துக்கு அருகில் காணப்படும் கற்குவாரியை உடனடியாக அப்புறப்படுத்துமாறு வலியுறுத்தி பிரதேச மக்கள் நேற்று சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த கற்குவாரியானது, சீன நிறுவனம் ஒன்றால் நடத்தப்பட்டு வருகிறது. கற்குவாரியின் ஆபத்தை முன்கூட்டியே உணர்ந்துகொண்டதால், மண்சரிவால் உயிரிழந்த பண்டார என்பவர், கடந்த வருடம் கற்குவாரிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததுடன், அந்த இடத்திலிருந்து தான் போகப்போவதில்லை என்று தெரிவித்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்டார் என சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.

மேலும் மண்சரிவில் சிக்குண்ட குறித்த நபரின் வீட்டிலிருந்து 100 மீற்றருக்கும் குறைந்த தூரத்தில் அமையப்பெற்றுள்ள பாறையை உடைக்கும் செயற்பாட்டை தடுக்க அவர் முயன்றதாகவும் அங்கு இடம்பெறும் வெடிப்பு செயற்பாடுகளாலேயே மணல் மேடு சரிந்து வீழ்ந்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

எனவே இந்தக் கற்குவாரி தொடர்பாக சரியான தீர்வு கிடைக்கும் வரை தாம் சத்தியாகிரகத்தைக் கைவிடப்போவதில்லையென அவர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து மத்திய மாகாண ஆளுநர் இது குறித்து ஆராய்ந்து இதற்கு உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆர்ப்பாட்டகாரர்களிடம் தெரிவித்ததையடுத்து, ஆரப்பாட்டம் கைவிடப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே வலப்பனை பகுதியில் உள்ள கற்குவாரிக்கான அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.


No comments