இலங்கை இந்திய ஒப்பந்தம் அமுலுக்கு பச்சை சமிக்ஞை!


தமிழ் மக்கள் எதிர்நோக்கும் இனப்பிரச்சினைக்கு 13ஆம் திருத்தச் சட்டம் ஓர் தீர்வு அல்ல என்பது இந்தியாவுக்கு நன்றாகவே தெரியும்.13ஆம் திருத்தச் சட்டமானது இந்திய இலங்கை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தல் என்ற பெயரில் அன்றைய ஜே,ஆர்.அரசாங்கத்தினால் இலங்கைப் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஓர் சட்டமாகும். இந்திய இலங்கை ஒப்பந்தம் வேறு 13ஆம் திருத்தச் சட்டம் என்பது வேறு. இந்திய இலங்கை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதாகக் கூறியே அந்த 13ஆம் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றினார்கள் என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

அந்த 13ஆம் திருச்சட்டம் நிறைவேற்றப்படும்போது இந்தியாவின் ஒத்துழைப்போ இந்தியாவின் அனுமதியோ இந்தியாவின் அனுசரணையோ கேளாமலேயே கொண்டுவரப்பட்டது. அதன் இறுதி வடிவத்தை தான் ஏற்றுக்கொள்வதாகக் கூட இந்திய கூறவில்லை. தமிழ்க் கட்சிகளுக்குகூட அந்த வரைபு காட்டப்படாமலேயே நாடாளுமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்டது. 13ஆம் திருத்தச் சட்டம் ஓர் பிரேரணையாக சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே தமிழ்க் கட்சிகளுக்குக்கூட அந்த விடயம் தெரிய வந்தது.

யாதார்த்தம் என்னவெனில் ஒரு புறம் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு நலன்களுக்காக இந்திய இலங்கை ஒப்பந்தம் நடைமுறையில் இருக்க வேண்டும் என்ற தேவை இந்தியாவுக்கு உண்டு. மறுபுறம்  20 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவினுடைய வட்டத்தினுள் இலங்கை வருவதற்கு இணங்கிய நிலையில் தமிழ் மக்களது இனப்பிரச்சினை தீர்வுக் கோரிக்கையை 13ஆம் திருத்தத்தினுள் முடக்குவதற்கு 13ஆம் திருத்தத்தினை தீர்வு என்றும் பெயரில் சிறீலங்கா அரசாங்கம் கொண்டுவந்தபோது இந்தியா அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருந்தது.

ஆனால் இன்று 20 ஆண்டுகளுக்குப் பின்னர் எதனை இந்தியா தனது தேசிய பாதுகாப்பு நலன்களுக்கு ஏதுவாக இந்திய இலங்கை ஒப்பந்தத்திலுள்ள அந்த விடயங்களை கடைப்பிடித்து இந்தியாவுடன் ஒத்துழைப்பார்கள் என்று எதிர்பார்த்தார்களோ அதனை மீறி இன்று இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு சவால் விடுக்கும் விதமாக பல சம்பவங்கள் நடைபெற்று முடிந்து விட்டன.
அவ்வாறான சூழலில் இந்தியா தொடர்ந்தும் தமிழ் மக்களுக்கும் நன்மை இ;ல்லாத இந்தியாவுக்கும் நன்மை ஏற்படுத்தாக சிறீலங்குக்கும் எந்த அழுத்ததத்தையும் ஏற்படுத்தாத ஒற்றையாட்சி அரசியலமைப்புக்குள் இருக்கக் கூடிய 13ஆம் திருத்தத்தையும் மாகாண சபைகளையும்தான் தமிழ் மக்களின் தீர்வாக வலியுறுத்தப் போகிறதென்றால் இது இந்தியாவுக்கும் ஒருபோதும் நன்மையை கொடுக்கப்போவதில்லை என்பதே எமது கருத்து எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தை நடைமுறையில் வைத்திருக்க வேண்டும் என்று வலியுத்துவதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எதிர்ப்பு இல்லை. அந்த ஒப்பந்தத்தில் ஒருசில குறைபாடுகள் இருக்கலாம் எனினும் இலங்கை இந்திய ஒப்பந்தம் தொடர்ந்தும் பேணப்பட வேண்டும் என்று வலியுறுத்துவதனை நாம் எதிர்க்கவில்லை.

ஆனால் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை நடைமுறையில் பேண வேண்டும் என்பதற்காக இந்த ஒப்பந்தத்துடன் நேரடியான தொடர்பில்லாத  13ஆம் திருத்தச் சட்டத்தையே தமிழர்கள் தீர்வாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென வற்புறுத்துவதனை நாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

No comments