மண் அகழ்வுக்கு எதிராக போராட்டம்!

மன்னார்- தலைமன்னார் பிரதான வீதி, தோட்டவெளிப் பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற மண் அகழ்வை நிறுத்தக் கோரி அப்பகுதி பெண்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

காடு சார்ந்த நிலப் பிரதேசத்தைக் கொண்ட குறித்த கிராமத்தில் சுமார் 100இற்கும் அதிகமான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.

இந்த நிலையில் குறித்த பகுதியில் மீன் வளர்ப்புத் திட்டத்தை செயற்படுத்துவதாகக் கூறி ஒரு தரப்பினர் பல மாதங்களாக மண் அகழ்வில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த மண் அகழ்விற்கான அனுமதி அநுராதபுரத்திலிருந்து வழங்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் குறித்த பகுதி பெண்கள் இணைந்து இன்று (04) காலை மண் அகழும் இடத்திற்குச் சென்று அகழ்வை தடுத்து நிறுத்தினர். அத்துடன், அகழ்வில் ஈடுபட்ட உழவு இயந்திரங்கள் மற்றும் JCB உள்ளிட்ட வாகனங்களுடன் பணியாட்கள் அவ்விடத்தில் தடுத்து வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் அவ்விடத்தில் மண் அகழ்விற்கான உரிமையைக் கோரி தென்பகுதியைச் சேர்ந்த ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இதையடுத்து, குறித்த பகுதிக்கு பங்குத்தந்தை அருட்தந்தை பெனோ அலேக்சான்டர் சில்வா, மன்னார் பிரதேச சபை உறுப்பினர் ஏ.ரி.லுஸ்ரின் ஆகியோர் சென்று மக்களுடன் கலந்துரையாடிய பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது.

No comments