ஊடக சுதந்திரத்திற்கான ஞாபகார்த்த ஊடக விருதுகள்!
அடக்குமுறைகளுக்கு எதிரான அகிம்சை வழி போராட்டகாலத்திலும் பின்னரான ஆயுத வழி போராட்டகாலத்திலும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக காத்திரமான பங்கை தமிழ் ஊடகவியலாளர்கள் ஆற்றியிருக்கின்றனர்.
அர்ப்பணிப்பு மிக்க ஊடகப பயணத்தில் வட-கிழக்கு பகுதிகளைச் சேர்ந்த 39 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சிலர் காணாமலும் ஆக்கப்பட்டுள்ளனர்.

அத்தகைய ஊடகப் படுகொலைகளிற்கான நீதி வேண்டி யாழ்.ஊடக அமையம் நீண்டதொரு பயணத்தை மேற்கொண்டிருக்கிருப்பது அனைவரும் அறிந்ததே.
அடக்கு முறைகளுக்கு அஞ்சாது உண்மைகளை வெளிக்கொண்டுவரும் உன்னதமாக ஊடகப் பணியில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களிற்கு அஞ்சலி செலுத்தி, அந்தப் பொறுப்பை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல புதிய இளம் ஊடகவியலாளர்கள் ஊக்குவிக்கப்படவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

அதற்காக முன்னெடுப்புக்களையும் கடந்த இரண்டு வருடங்களாக யாழ்.ஊடக அமையம் முன்னெடுத்துவருகின்றது.

அடக்குமுறைகளுக்கு எதிரான பேனா முனைப் போராட்டத்தில் தமது இன்னுயிர்களை ஈந்;தளித்த ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் நிகழ்வுகள் வருடந்தோறும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

இதன் அடுத்த கட்டமாக வருடந்தோறும் ஊடகவியலாளர்களை ஊக்குவிக்கும் வகையிலான பின்வரும் விருதுகளை யாழ்.ஊடக அமையம் இவ்வருடம் முதல் வழங்க தீர்மானித்துள்ளது.

அவ்வாறு வழங்கப்படவுள்ள விருதுகளிற்கான தெரிவை யாழ்.ஊடக அமையத்தின் மத்திய குழு கூடி தீர்மானித்துள்ளது.
இதன் பிரகாரம் 

மயில்வாகனம் நிமலராஜன் விருது
போர் சூழல் நிலவிய யாழ்ப்பாணத்தில் இருந்து தான் சார்ந்த மக்களிற்காக ஓயாது குரல் கொடுத்து வந்த ஊடகவியலாளன் மயில்வாகனம் நிமலராஜன். பிபிசியின் தமிழ் ஓசை, சிங்கள சேவையான சந்தேசிய, வீரகேசரி நாளேடு, ராவய சிங்கள வார இதழ் என ஊடகப்பரப்பெங்கும் அவர் நிறைந்திருந்தார்.தனது மும்மொழி பரிட்சயம் காரணமாக தெற்கு ஊடகப்பரப்புடன் இனம்,மதம் ,மொழி தாண்டி நெருங்கிய நட்பு கொண்டிருந்த நிமலராஜன் 2000ம் ஆண்டின் ஒக்டோபர் 19ம் திகதி எம்மிடமிருந்து பிரிக்கப்பட்டார்.

தராகி சிவராம் விருது
தர்மரத்தினம் சிவராம் அல்லது தராகி சிவராம் தமிழ் ஊடகப்பரப்பின் அளவிடமுடியாத சொத்தாக இனங்காணப்பட்டவர். இலங்கையிலும் உலகப்பரப்பிலும்  பிரபலமான ஊடகவியலாளரான அவர் தமிழ்நெட்டின் பிரதம ஆசிரியராகவும் பணியாற்றிவந்திருந்தார்.அரசியல் தீர்க்கதரிசியான தராகி சிவராமின் கட்டுரைகள் இன்றளவும் தமிழ் தேசிய அரசியல் பரப்பில் பேசுபொருளாக இருந்தே வருகின்றது.
கொழும்பு பம்பலப்பிட்டியில் காவல் நிலையம் முன்பாக கடத்தப்பட்ட தராகி சிவராம் ஏப்ரல் 28, 2005ம் ஆண்டில் எம்மிடமிருந்து பிரிக்கப்பட்டார்.

ஜயாத்துரை நடேசன்
ஐயாத்துரை நடேசன் தமிழ் தேசியப்பரப்பின் முன்னோடி தமிழ் ஊடகவியலாளர்களுள் ஒருவராக கிழக்கில் தனது பணிகளை முன்னெடுத்திருந்தார். யாழ்ப்பாணம் நெல்லியடியைச் சேர்ந்த இவர் நெல்லை நடேசன் என்ற பெயரில் எழுதிவந்தார். இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் துணைத்தலைவராக பணியாற்றிய அவர்; சக்தி தொலைக்காட்சியின் மட்டக்களப்பு நிருபராகவும், வீரகேசரி நாளேட்டின் எழுத்தாளராகவும், ஐ.பி.சி. நிறுவனத்துக்கான இலங்கை நிருபராகவும் பணியாற்றி வந்திருந்தார்.
2004 ஆண்டின் மே 31 ம் திகதியன்று எங்களிடமிருந்து அவர் பிரிக்கபட்டிருந்தார். 

செல்வராசா ரஜிவர்மன் விருது 
யாழ்ப்பாணத்தின் ஆவரங்காலினை சேர்ந்த செல்வராசா ரஜிவர்மன் நமது ஈழநாடு பத்திரிகையில் தனது பணியினை ஆரம்பித்திருந்த நிலையில் பின்னராக யாழ்.தினக்குரலிலும் இறுதி நாட்களில் உதயன் நாளிதழிலும் தனது பணிகளை ஆற்றியிருந்தார்.
துடிப்பு மிக்க இளம் பத்திரிகையாளனாக பணியாற்றிய ரஜிவர்மன் 2007ம் ஆண்டின் ஏப்ரல் 29ம் திகதி எம்மிடமிருந்து பிரிக்கப்பட்டார்.


புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி விருது
யாழ்ப்பாண மாவட்டம், மண்டைதீவைப் பூர்வீகமாகக் கொண்ட புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி புலம்பெயர் வாழ் தமிழ் மக்களால் நன்கு அறியப்பட்ட வன்னியைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளரும் ஊடகவியலாளரும் ஆவார். 
ஈழநாதத்தில் படைத்துறை பத்தியை எழுதி வந்த இவர், ஈழநாடு பத்திரிகையில் ஊடகவியலாளராக செயற்பட்டு அரசியல் படைத்துறை ஆய்வுகளையும் எழுதி வந்தார்.
2009ம் ஆண்டின் இறுதி யுத்த காலத்தில் பெப்ரவரி 12ம் திகதி அவர் எம்மிடமிருந்து பிரிக்கப்பட்டார்.
சகாதேவன் நிலக்சன் விருது 
யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தின் ஊடகக் கற்கை மாணவனும், சாரளம் சஞ்சிகையின் ஆசிரியரும், யாழ்ப்பாண மாணவர் பேரவையின் முன்னாள் தலைவருமான சகாதேவன் நிலக்சன் இளம் ஊடக மாணவனாக தனது பயணத்தை ஆரம்பித்திருந்தார்.
தனது எழுத்துக்களால் மாணவ சமூகத்திடையே விழிப்புணர்வை ஏற்படுத்த பாடுபட்ட சகாதேவன் நிலக்சன் 2007 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி எம்மிடமிருந்து பிரிக்கப்பட்டிருந்தார்..  

சுப்பிரமணியம் சுகிர்தராஜன் விருது
சுப்பிரமணியம் சுகிர்தராஜன் எஸ்.எஸ்.ஆர் என அழைக்கப்பட்ட சுகிர்தராஜன் மட்டக்களப்புக் குருமண்வெளியில் பிறந்தார். திருகோணமலை நகரின் போர்ச் சூழலில் இருந்து பல செய்தி நிறுவனங்களுக்கு செய்திகளை வழங்கி வந்தவர். சுடரொளி, உதயன் ஆகிய பத்திரிகைகளின் திருகோணமலை நிருபராகக் கடமையாற்றிய சுகிர்தராஜன் வீரகேசரி, மெற்றா நியூஸ் ஆகியவற்றில் அரசியல் கட்டுரைகள் எழுதிவந்தார். 

2006ம் ஆண்டின் ஜனவரி 24ம் திகதியன்று திருகோணமலையில் வைத்து அவர் எங்களிடமிருந்து பிரிக்கப்பட்டிருந்தார்.

ஊடக விருது வழங்கும் நிகழ்வு நாளை 30ம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் 5.00 மணிக்கு யாழ்.நகரிலுள்ள யூ.எஸ் ஹோட்டலில் சிறப்பாக நடைபெறவுள்ளது


No comments