தேசிய பாடசாலை உருவாக்கம் குறித்து கலாவின் அறிக்கை

வடக்கு- கிழக்கில் தேசிய பாடசாலைகள் அமைக்கும் விடயத்தில் மாகாண சபைகளின் அதிகாரங்களுக்கு பங்கம் ஏற்படாத வகையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மேலும்,

வடக்கிலும் பல பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக மாற்றுவதற்கு நான் நடவடிக்கையினை எடுத்தபோது பெரும்பான்மையான புத்திஜீவிகள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

மாகாண சபைகளுக்கான அதிகாரத்தை மத்திய அரசு பெறும் முயற்சியாக இது அமையும் என்றும் அவர்கள் தமது ஆதங்கத்தை தெரிவித்தனர்.

தற்போது இடைக்கால அரசாங்கமானது, பிரதேச செயலாளர் பிரிவுகள் தோறும் 3 பாடசாலைகளை தெரிவு செய்து தேசிய பாடசாலையாக மாற்றுவதற்கு திட்டமிட்டுள்ளது.

வடக்கு- கிழக்கைப் பொறுத்தவரையில் இத்தகைய செயற்பாடு மாகாணங்களின் அதிகாரத்தை மத்திய அரசாங்கம் பறிப்பதாகவே அமையும். எனவே தொகுதிக்கு ஒரு பாடசாலையை தெரிவு செய்து அவற்றின் வளங்களைப் பெருக்கி தேசிய பாடசாலையாக மாற்றவது குறித்து பரிசீலிக்கலாம். ஆனால் முழுமையாக பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக மாற்றப்பட்டால் அது மாகாணங்களுக்கான அதிகாரத்தை பறிப்பதாகவே அமையும்.

இல்லாவிடின் வடக்கு- கிழக்கில் மாகாண பாடசாலைகளை, மாகாண சபை அதிகாரத்துக்குள்ளேயே வைத்துக்கொண்டு அவற்றினை அபிவிருத்தி செய்வதற்கு மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதேச செயலாளர் பிரிவுகள் தோறும் இவ்வாறு 3 பாடசாலைகளை அபிவிருத்தி செய்தால் அது பயனளிக்கக்கூடியதாக இருக்கும்.

வடக்கில் யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் தொகுதிக்கு ஒரு பாடசாலையை தேசிய பாடசாலையாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கலாம். உதாரணத்துக்கு வட்டுக்கோட்டை தொகுதி, காங்கேசன்துறை தொகுதி, பருத்தித்துறை தொகுதி, ஊர்காவற்றுறை தொகுதி, கோப்பாய் தொகுதி போன்றவற்றில் தேசிய பாடசாலைகள் இல்லாத நிலை காணப்படுகிறது.

அத்தகைய இடங்களில் பாடசாலை ஒன்றைத் தெரிவு செய்து வளங்களைப் பெருக்கி அதற்கான நடவடிக்கையினை எடுக்க முடியும். அதுவும் அப்பகுதி புத்திஜீவிகளுடனும் அரசியல் தலைவர்களுடனும் கலந்துரையாடியே முடிவுகள எடுக்கப்பட வேண்டும். - என்றார்.

No comments