யாழில் வைக்கப்பட்ட சிலைகள் வெகுண்டெழுந்த மக்கள்

யாழ்ப்பாணம் – பண்ணைப் பகுதியில் உள்ள சிறைச்சாலைக்கு முன்பாக இன்று (21) அதிகாலையில் இரவோடு இரவாக அமைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய சிலைகள் எதிர்ப்பையடுத்து அகற்றப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் இரவோடு இரவாக புத்தர் சிலையை வைக்கத் திட்டமிட்டதாக நேற்று (20) இரவு தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் இன்று (20) காலை அங்கு சென்ற மாநாகர சபை உறுப்பினர்கள் மற்றும் மக்கள் புத்தர் சிலையை அங்கு நிர்மாணிக்க முற்படுவதாகவும் பௌத்த மயமாக்கப்படுவதாகவும் தெரிவித்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
எனினும் குறித்த சிலை புத்தர் சிலை இல்லையென்றும் சங்கமித்த இலங்கைக்கு வந்திறங்கிய காட்சியை சித்தரிக்கும் சிலையே அதுவென்றும் சிலையை நிர்மாணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
இருந்தபோதிலும் மக்களின் தொடர் எதிர்ப்பு காரணமாக சர்ச்சைக்குரிய குறித்த சிலைகள் மறைமுகமாக சிறைச்சாலைக்குள் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்த சிலை, கைதி ஒருவரால் 5 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைக்கு உள்ளே இருந்த இந்தச் சிலை நேற்று சிறைச்சாலைக்கு வெளியே எடுத்து வரப்பட்டதுடன், சிலையை மூடி துணியால் கட்டப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
குறித்த சிறைச்சாலையின் ஒருபக்க சுவரில் சங்கமித்தை இலங்கைக்கு வந்திறங்கிய காட்சியை சித்தரிக்கும் ஓவியம் வரையப்பட்டு, அதற்கு முன்னால் சங்கமித்தை சிலை மற்றும் நம்பியதீசன் குடைபிடிப்பது போன்ற சிலைகளே அமைக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, சிறைச்சாலையின் மற்றொரு சுவரில் யாழின் இறுதி மன்னன் சங்கிலியனின் வரலாற்றை சித்தரிக்கும் ஓவியத்தை வரைவதற்கு வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம் சிறைச்சாலை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தார்.
இதனையடுத்து குறித்த கோரிக்கையை எழுத்து மூலம் தெரிவிக்குமாறும் அதற்கு சிறைச்சாலை திணைக்களத்தின் அனுமதி வழங்கப்பட்டதன் பின்னர், சங்கிலியனின் வரலாற்றை சித்தரிக்கும் ஓவியத்தை வரைய முடியுமெனவும் சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.




No comments