இந்திய படகுகளை விடுவிக்க உள்ளுர் மீனவர்கள் சம்மதம்!


இலங்கை மற்றும் இந்திய மீனவர்கள் கடல் எல்லை தாண்டுகின்ற சந்தர்ப்பங்களில் இரு நாட்டு கடற்படைகளும் இடையிலேயே அவர்களை தடுத்து திருப்பி அனுப்பிவிடவேண்டுமென தீவக வடக்கு மீனவ சமாசம் கோரிக்கை விடுத்துள்ளது.இதன் மூலம் தேவையற்ற கைது மற்றும் சிறை என்பவற்றினை தடுக்க முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை நடந்த பத்திரிகையாளர் சந்திப்பிலேயே சமாசம் இக்கோரிக்கையினை விடுத்துள்ளது.

இதனிடையே வடக்கு கடற்பரப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களது படகுகளை விடுவிப்பதற்கு தனது ஆதரவையும் அது தெரிவித்துள்ளது.

குறிப்பாக ஊர்காவல்துறை கடற்படை தளத்தில் நூற்றுக்கணக்கான இந்திய இழுவை படகுகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

இப்படகுகளால் சுற்றுசூழல் பாதிப்பே ஏற்பட்டுவருகின்றது.இதனால் அவற்றினை விடுவித்து விடலாம்.

பதிலுக்கு இந்திய கடற்பரப்பினுள் புகுந்ததாக கூறி இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எமது படகுகளை விடுவிக்க ஜனாதிபதியும் மீன்பிடி அமைச்சரான டக்ளஸ் தேவானந்தாவும் முன்வரவேண்டுமெனவும் சமாசம் கோரியுள்ளது.
இதனிடையே இந்திய நாட்டுப்படகுகள் இலங்கை கடற்பரப்பில் தொழிலில் ஈடுபட தடையில்லையென தெரிவித்த சமாச பிரதிநிதிகள் ஆனால் தடை செய்யப்பட்ட இழுவைப்படகுகளை என்றுமே நாம் அனுமதிக்கப்போவதில்லையெனவும் தெரிவித்துள்ளனர்.  

கடந்த 29ம் திகதி டெல்லி சென்றிருந்த இலங்கை ஜனாதிபதி கோத்தாவிடம் இலங்கையில் தரித்து வைக்கப்பட்டுள்ள  இந்திய படகுகளை விடுவிக்க இந்திய பிரதமர் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments