கைது மூலம் கடத்தல் கதையினை மறைக்க முயற்சி!

சுவிஸ் தூதரக பணியாளர் கடத்தப்பட்டமை மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் அவர் தொடர்ச்சியாக விசாரணை என்ற பேரில் அச்சுறுத்தப்பட்டமையால் குழப்பமடைந்து வாக்குமூலங்களை அளித்துள்ளமை அம்பலமாகியுள்ளது.
இந்நிலையில் குறித்த பணியாளர் கைது செய்யப்பட்டுள்ளமை சுவிஸ் அரசை சீற்றங்கொள்ள வைத்துள்ளது.கைதின் பின்னர் அவசர அவசரமாக சுவிஸ் தூதர் சந்திப்பொன்றை கோத்தாவுடன் நடத்தியமை இதன் தொடர்ச்சியென சொல்லப்படுகின்றது.
இதனிடையே தவறான அறிக்கைகளை வெளியிட்டதாகக் கூறி விசாரணை என்ற பெயரில் சில காலமாக மிகவும் அலைய விட்டு கைது செய்யப்பட்டு இப்பொழுது விளக்கமறியலில் வைக்கப்பட்ட சுவிஸ் பணியாளர்க்கு நடக்கும் அநீதி குறித்து
சுவிட்சர்லாந்தில் உள்ள மத்திய வெளியுறவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

குரித்த பணியாளர் தொடர்பான எந்தவொரு நடவடிக்கைகளிலும் தேசிய சட்டம் மற்றும் சர்வதேச தரங்களுக்கு அமைய தனிப்பட்ட உரிமைகளை பாதுகாக்க உறுதி செய்யுமாறு இலங்கை நீதித்துறை அதிகாரிகளிடம் சுவிஸ் மத்திய வெளியுறவுத் துறை வலியுறுத்தியுள்ளது.
வெளியுறவுத் துறை மற்றும் கொழும்பு சுவிஸ் தூதரகம் தங்கள் பொறுப்புகளை தொடர்ந்து பூர்த்திசெய்து சம்பந்தப்பட்ட ஊழியருக்கு உதவ தங்கள் சக்தியால் முடிந்த அனைத்தையும் செய்யும் என்றும் கூறியுள்ளது.
நவம்பர் 25, 2019 அன்று, சுவிஸ் தூதரகத்தின் உள்ளூர் ஊழியர் தூதரகம் தொடர்பான தகவல்களை வெளியிடுமாறு கட்டாயப்படுத்தி கொழும்பில் கடத்தப்பட்டதாக தெரிவித்தார். பாதிக்கப்பட்ட பணியாளர் மற்றும் சுவிஸ் தூதரகம் இருவரும் இந்த நடவடிக்கைகளின் போது இலங்கை அதிகாரிகளுடன் முழுமையாக ஒத்துழைத்தனர் என்பதும் உடல்நலம் சரியில்லாமல் இருந்தபோதும், மூன்று நாட்களுக்கு மேலாக குறித்த ஊழியர் 30 மணி நேர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதையும், விசாரணைகள் முடிவடைவதற்கு முன்னர் இலங்கையின் மூத்த அதிகாரிகளின் பொது அறிக்கைகளையும் சுவிஸ் மத்திய வெளியுறவுத்துறை இவ்வறிக்கையில் சுட்டிகாட்டியுள்ளது.
"எமது ஊழியர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கை சட்ட அமுலாக்க அதிகாரிகள் தேசிய சட்டம் மற்றும் சர்வதேச நீதித் தரங்களுக்கு இணங்க வேண்டும் என்றும் பணியாளரின் உரிமைகள் இப்போது சிறப்பாக பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் FDFA எதிர்பார்க்கிறது.
பொருந்தக்கூடிய சட்டத்தின் கீழ் தங்கள் கடமைகளை பூர்த்திசெய்யவும், பணியாளரின் மோசமான உடல்நிலைக்கு உரிய கவனம் செலுத்தவும் இலங்கை அதிகாரிகளை FDFA அழைப்பு விடுக்கிறது. இந்த உயர் வழக்கில் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தும் ஒரு நாடு என்ற இலங்கையின் நற்பெயருக்கு ஆபத்து உள்ளது என்பதை சுவிட்சர்லாந்து வலியுறுத்த விரும்புகிறது.
கொழும்பில் உள்ள FDFA மற்றும் சுவிஸ் தூதரகம் முடிந்தவரை எங்கள் ஊழியருக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும்.
பாதுகாப்பு சம்பவத்தை தீர்க்க ஒரு பொதுவான மற்றும் ஆக்கபூர்வமான வழியை நாடுகிறோம் என்று இலங்கை அதிகாரிகளுக்கு FDFA மீண்டும் வலியுறுத்துகிறது." என்றும் இவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

No comments