காழ்ப்புணர்ச்சிகள் இன்றி செயற்படுவேன்

புத்திசாலித்தனமான செயற்பாடுகளும் கடின உழைப்புடனும் யாழ்.மாவட்டத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுப்பேன் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் அதிகார சபை அலுவலகம் இன்று(புதன்கிழமை) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘அரசியல் பழிவாங்கல்கள் இல்லாமல், எந்த வித அரசியல் காழ்ப்புணர்ச்சிகள் இன்றி, வேறுபாடுகள் இன்றி அபிவிருத்தியை இலக்காக கொண்டு செயற்படுவோம்.
எனவே எமது மாவட்டத்தை கட்டியெழுப்ப புத்திசாலித்தனமான செயற்பாட்டுடன், கடின உழைப்புடன் தொழிற்படுவோம்.
எங்கள் பிரதேச மக்கள் தங்கள் குறைகளை, பிரச்சினைகளை எங்கே போய் சொல்வது என்று தெரியாமல் இருந்தார்கள்.
இனிவரும் காலங்களில் திங்கள், வெள்ளி ஆகிய நாட்களில் எமது இந்த அலுவலகத்திற்கு வந்து தங்கள் குறைகளை பிரச்சனைகளை கூறலாம்.
புதன் கிழமைகளில் பொதுமக்கள் தினமாக ஒதுக்கி அன்றைய தினம் நான் அலுவலகத்தில் இருந்து மக்களின் பிரச்சனைகளை கேட்டறிவதுடன், அவற்றை விரைந்து தீர்க்கவும் நடவடிக்கை எடுப்பேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

No comments