முறைகேடுகள் மூடி மறைக்கப்பட்டனவா!ஆசிரியர் சங்கம் கேள்வி!

யா/இந்து மகளிர் ஆரம்ப பாடசாலை அதிபரின் முறைகேடுகள் தொடர்பாக நடத்தப்பட்ட ஆரம்ப புலனாய்வு விசாரணையானது - முறையாக நடைபெற்றிருக்கவில்லை.
அதிபரைப் பாதுகாக்கும் நோக்கிலேயே - நாடகமொன்று அரங்கேற்றப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.


இவ்விடயம் தொடர்பாக - நீதியான மீள் விசாரணை கோரி - வடமாகாண கல்வியமைச்சின் செயலாளருக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் கடிதம் அனுப்பியுள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளவையாவன;

யா/இந்து மகளிர் ஆரம்ப பாடசாலை அதிபர்தொடர்பாக நடத்தப்பட்ட ஆரம்ப புலனாய்வு விசாரணையானது - முறையாக நடைபெற்றிருக்கவில்லை. அதிபரைப் பாதுகாக்கும் நோக்கிலேயே - விசாரணையாளர்கள் செயற்பட்டுள்ளமையும் அப்பட்டமாக தெளிவாகியுள்ளது.

இதற்கு வடமாகாண கல்வியமைச்சும் உடந்தையாக இருந்துள்ளதோ எனும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

எம்மால் குறித்த பாடசாலையின் அதிபரின் முறைகேடுகள் தொடர்பாக - விபரங்களுடனேயே வடமாகாண கல்வியமைச்சிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பலமாதங்கள் இழுத்தடிக்கப்பட்ட நிலையிலேயே - எமது தொடர் அழுத்தத்துக்காக - எம்மைப் போக்குக்குக்காட்டும் நடவடிக்கையாகவே வடமாகாண கல்வியமைச்சால் மேற்கொள்ளப்பட்டுள்ளதோ எனும் அதிருப்தி எமக்கு ஏற்பட்டுள்ளது.


இந்த இடைப்பட்ட காலத்திலேயே தற்காலிக பொருள் பதிவேடு போன்று ஒன்றை தயாரித்து முறைகேடுகளை மூடிமறைக்க பலரது அனுசரணை பெறப்பட்டுள்ளமையை ஊகிக்க முடிகின்றது.


நிதிப்பிரமாணக்குறிப்பின் பிரகாரம் பாடசாலைப் பொருட்பதிவேட்டைத் தவிர்த்து - தற்காலிக பொருட்பதிவேடு ஒன்றை பேணும் நடைமுறை இல்லை. நேர்மையான நிர்வாகத்துக்கு அது அவசியமுமில்லை.

அவ்வாறு இருக்க - தற்காலிகப் பொருட்பதிவேட்டைத் தயாரித்து முறைகேட்டை மூடிமறைப்பதற்கான நாடகமே அரங்கேற்றப்பட்டுள்ளது.


விசாரணை அறிக்கையின் பிரகாரம் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் 26.02.2019 ஆம் திகதிய கடித முறைப்பாட்டின் அடிப்படையிலான அவதானிப்புகள் என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் - முறைப்பாட்டைச் செய்திருந் இலங்கை ஆசிரியர் சங்க தரப்பிடமிருந்து - வாக்குமூலம் ஒன்றைக்கூட விசாரணைக்குழு பெற்றிருக்கவில்லை.

முறைப்பாடு செய்த தரப்புக்களில் ஒன்றான இலங்கை ஆசிரியர் சங்கத்தினரிடம் வாக்குமூலம்பெறாமல் நடைபெற்ற இந்த விசாரணை - திட்டமிட்டு முறைகேடான முறையில் திசைதிருப்பப்பட்டுள்ளது.

பாடசாலை அனுமதிக்காக பணம் பெறுவது என்பதே முறைகேடான நடைமுறையாகும்.

எனவே - இந்த விசாரணையில் பாடசாலை அதிபர் மாணவர் அனுமதிக்காக பணமாகவும் பொருளாகவும் பெற்றிருந்தமை நிரூபிக்கப்பட்டுள்ளது. இதுவே - சுற்றுநிருபத்தை மீறிய தண்டனைக்குரிய குற்றமாகும். இந்த செயற்பாடுகளுக்காகவே அண்மையில் பிரபல பாடசாலை அதிபர் ஒருவர் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைதும் செய்யப்பட்டிருந்தார்.

ஆனால் - முறைகேடாக வாங்கிய பணத்துக்கு எம்மால் ஆதாரங்கள் திரட்டப்பட்டிருந்த நிலையில் - போலியான நடைமுறைகளூடாக தற்காலிக பொருட்பதிவேடு என்று தயாரிக்கப்பட்டமை தெளிவாகிறது.

இந்த சுற்றுநிரூபத்தை மீறிய நடைமுறையை விசாரணையாளர்கள் நியாயப்படுத்த முயன்றமை வன்மையான கண்டனத்துக்குரிய விடயமாகும்.


2017 ஆம் ஆண்டு ரூபா 100,000/- மாணவர்களுக்கான இறுதி கௌரவிப்பின் போது பணமாகவே மேடையில் வைத்து வழங்கப்பட்டுள்ளது. இப்பணம் வங்கியில் வைப்பிடப்படாமலிருந்த நிலையில் - அவை ஆவணங்களின் படி பொருட்களாகவே பெற்றுக்கொள்ளப்பட்டதாக விசாரணையாளர்களால் மூடிமறைக்கப்பட்டுள்ளது.


பொருட்கொள்வனவு எனக் குறிப்பிடும் விசாரணைக்குழு - பொருட்கொள்வனவு தொடர்பாக உரிய நடைமுறை பின்பற்றப்பட்டதா? என்பது குறித்தும் தெளிவுபடுத்தாமல் மூடிமறைத்துள்ளது.


எம்மால் முறைப்பாட்டில் வழங்கப்பட்ட சில முறைப்பாடுகள் தொடர்பாக எவ்வித கருத்தும் விசாரணையாளர்கள் அறிக்கையில் தெரிவிக்கவில்லை. அவையாவும் திட்டமிட்டு மூடி மறைக்கப்பட்டுள்ளது.


இந்த விசாரணைக்குழுவில் மூவர் நியமிக்கப்பட்டிருந்தனர். அதில் வடமாகாண கல்வித் திணைக்கள கணக்காளரும் ஒருவராவார்.

ஆனால் - குறித்த விசாரணை கணக்காளரின் பிரசன்னமின்றியே நடைபெற்றுள்ளன. எம்மால் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பாக - ஏனைய சாட்சியாளர்கள் எவரும் அழைக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்படாமல் ஒரே நாளில் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளமை வேடிக்கையான விசாரணைப் பொறிமுறையாகும். இப்பொறுப்பற்ற பொறிமுறைக்கு எமது வன்மையான கண்டத்தையும் தெரிவிக்கின்றோம்.


யா/இந்து மகளிர் ஆரம்பப்பாடசாலை அதிபர் தொடர்பாக நடைபெற்ற விசாரணை கண்துடைப்பானதும், உரிய நடைமுறை பின்பற்றப்படாத பக்கச்சார்பானதுமாகும்.


எனவே - உரிய முறையில் நீதியான விசாரணை நடத்தப்படவேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் மீண்டும் வலியுறுத்துகிறது.

இவ்விடயம் தொடர்பாக நாம் தங்களிடமிருந்து அதிக கரிசனையுடைய ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை இருவாரங்களுக்குள்  எதிர்பார்க்கின்றோம்.

எனக் குறிப்பிடப்பட்டுள்ளது

No comments