திருவள்ளுவர் மீது சாணி வீச்சு! மக்கள் ஆர்ப்பாட்டத்தால் பதற்றம்!

தஞ்சை, பிள்ளையார் பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலை மீது  நேற்று இரவு மர்மநபர்கள் சாணத்தை அடித்துவிட்டுச் சென்றுள்ளனர். அதுமட்டுமின்றி, திருவள்ளுவரின் சிலையின் கண்களையும் கருப்பு காகிதத்தால் மூடியுள்ளனர். சிலை மீது சாணம் பூசிய மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசித் தேடி வருகின்றனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனையடுத்து, அங்கு வந்த டிஜிபி திரிபாதி சிலையின் மீது சாணம் பூசிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் படும் என்று உறுதி அளித்ததால் மக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். அதன் பின், இச்சம்பவம் குறித்து  விசாரிக்க டிஜிபி திரிபாதி தனிப்படை அமைத்தார். தனிப்படை காவல்துறையினர் நடத்திய விசாரணையில் திருவள்ளுவரின் சிலை அருகே இருந்த சிசிடிவி காட்சிகள் கிடைத்துள்ளன. அந்த காட்சிகள் மூலம் அவமதிப்பில் ஈடுபட்ட நபர்களை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அந்த மர்ம நபர்கள் குறித்த எந்த தகவல்களும் இன்னும் வெளியாகவில்லை.

இது குறித்துப் பேசிய திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய மண்டல ஐஜி வரதராஜு, இச்சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள்  மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். 

No comments