நேற்று 80 விழுக்காடு வாக்களிப்பு?


நேற்றைய தினம் தபால் மூலம் வாக்களிக்க முடியாமல் போன தபால் மூல வாக்களிப்போர் இன்று காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.15 மணி வரையிலான காலப்பகுதியில் தமது அலுவலகத்தில் வாக்களிக்க முடியும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஆறு இலட்சத்து 59 ஆயிரத்து 30 பேர் தபால்மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
ஜனாதிபதி தேர்தலில் தபால் மூல வாக்களிப்பு 3 கட்டங்களின் கீழ் இடம்பெறுகின்றது. இதற்கு அமைவாக பொலிஸ் மற்றும் மாவட்ட செயலக ஊழியர்களுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 4 ஆம், 5 ஆம் திகதிகளில் இடம்பெறும்.
இந்த 4 தினங்களில் தபால் மூல வாக்களிப்பை மேற்கொள்ள முடியாத அரச ஊழியர்கள் எதிர்வரும் 7 ஆம் திகதி தபால் மூல வாக்களிப்பை மேற்கொள்ளமுடியும். நேற்றையதினம் வாக்களிப்பு மிகவும் சுமூகமாக இடம்பெற்றது என கெப்பே அமைப்பு தெரிவித்துள்ளது.
நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்தி தபால் மூல வாக்களிப்பை நேற்று கண்காணித்ததாக அந்த அமைப்பின் பணிப்பாளர் திருமதி சுரங்கி ஆரியவங்ச தெரிவித்தார்.
சில இடங்களில் சட்டவிரோதமாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததாகவும் சட்டவிரோத பிரச்சார நடவடிக்கைகள் இடம்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எனினும் எந்தவொரு பாரதூரமான சம்பவங்களும் பதிவாகவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, 80 சதவீதமான தபால் வாக்குகள் ​நேற்றைய தினம் பதிவாகியுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
இதே வேளை இன்றைய தினம் ஜனாதிபதி தேர்தல் தபால் மூல வாக்களிப்பு இடம்பெறும் இடங்களில் பொலிஸ் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments