விஞ்ஞாபனம் வெளியாட்டார் சிவாஜி

ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஊடாக சர்வதேச சமூகத்திடம் முன்வைக்கப்படும் தமிழ் தேசியத்தின் திருகோணமலை பிரகடனம் எனும் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது.
இந்த விஞ்ஞாபனம் வெளியிடும் நிகழ்வு இன்று (சனிக்கிழமை) குளக்கோட்டம் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
குறித்த விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “புதிதாக உருவாக்கப்படும் அரசியலமைப்பு, ஒற்றையாட்சி முறையை நிராகரித்து தமிழ் தேசத்தினை அங்கீகரித்து அதற்கு தனித்துவமான இறைமை உண்டு என்பதனையும் தமிழ் மக்கள் சர்வதேச சட்டத்தின் கீழ் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்பதையும் அங்கீகரித்து சமஷ்டி ஆட்சி முறைமையின் கீழ் இலங்கையின் தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும்.
இறுதிப் போரில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை என்பவற்றிற்கு முழுமையான சர்வதேச பொறிமுறை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மற்றும் சர்வதேச தீர்ப்பாயம் ஊடாக விசாரணைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.
பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும். தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட வேண்டும். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரத்தில் சர்வதேச பொறிமுறையுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படல் வேண்டும்.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் நிலைகொண்டிருக்கும் அரச படைகள் போருக்கு முன்னர் தமிழ் மக்களின் பாவனையில் இருந்த தனியார் மற்றும் அரச காணிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு காணிகள் அனைத்தும் உடனடியாக விடுவிக்கப்படுவதுடன் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படல் வேண்டும்.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் அரசாங்க ஆதரவுடன் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சிங்கள மயமாக்கல், பௌத்த மயமாக்கல் மற்றும் சிங்கள குடியேற்றங்களை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
வடக்கிற்கு மகாபலியின் நதியை திசை திருப்புவது என்ற போர்வையில் வடக்கு மாகாணத்தில் சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்துவதற்காக மாத்திரமே திட்டமிட்டு செயற்படும் சபையாக மகாவலி அதிகார சபை இயங்குவதால் மகாவலி அதிகார சபையின் நியாயாதிக்கம் வடக்கில் இல்லாது ஒழிக்கப்பட வேண்டும்.
அத்துடன் கிழக்கு மாகாணத்தில் மகாவலி அபிவிருத்தித் திட்டம் என்ற பெயரில் இடம்பெறும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் அனைத்தும் நிறுத்தப்படவேண்டும். அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட மொரகஹகந்த நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் வன்னிப் பிரதேசத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்படவேண்டும்.
தொல்லியல் திணைக்களம், வன வளத் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம் உட்பட பல அரச திணைக்களங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்டுவரும் நில மற்றும் வழிபாட்டுத்தலங்களின் ஆக்கிரமிப்புகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.
போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தியையும் இளைஞர்களின் வேலை வாய்ப்புக்களையும் ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு வெளிநாடுகளில் வாழும் இளைஞர்களிடம் இருந்து நேரடி முதலீடுகளை இலகுவாகப் பெற்றுக் கொள்வதற்கு ஏதுவாக இங்கு காணிகளையும் மற்றும் நிதிகளையும் கையாள்வதில் இப்போது அவர்கள் எதிர்கொள்ளும் சட்டப் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும்.
வடக்கு கிழக்கிற்கான அரச மற்றும் தனியார் துறைகளில் வேலை வாய்ப்புகளில் அந்தந்த மாகாணத்தைச் சார்ந்த மக்களுக்கே முன்னுரிமை வழங்கப்படல் வேண்டும்.
வடக்கு கிழக்கினை போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசமாக பிரகடனப்படுத்தி அதன் அபிவிருத்திக்கான நிதியினை கையாள்வதற்கு வடக்கு கிழக்கில் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் நெறிப்படுத்தலில் பொதுக்கட்டமைப்பு ஒன்றினை உருவாக்குதல் வேண்டும்.
மேற்கூறிய கோரிக்கைகள் உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய விடயங்களாகும். ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்து புதிய ஜனாதிபதி பதவியேற்ற மூன்று மாத காலப்பகுதிக்குள் தீர்வு காணப்பட வேண்டும். என குறித்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments