விடுதலையாகும் அறிகுறியா? சுடிதாரில் கலக்கும் சசிகலா!

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அவரது உடன்பிறவா சகோதரி சசிகலாவுக்கும், இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும் 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதன்படி, இவர்கள் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர்.
பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு நன்னடத்தை விதிகளின்படி தண்டனை குறைக்கப்பட உள்ளதாகவும், அவர் ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் விடுதலையாவார் என்றும் சமீபத்தில் செய்திகள் வெளியாயின. அதை கர்நாடக சிறைத் துறை டிஜிபி மறுத்தார்.
எனினும், சசிகலா விடுதலை குறித்து அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டது. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சிறையில் இருந்து சின்னம்மா விரைவில் வெளிவர வேண்டும் என்பதுதான் எனது தனிப்பட்ட விருப்பம்.
அவர் வெளியே வந்த பிறகு வீட்டில் இருந்தாலும் அதிமுக ஆட்சிக்குத்தான் துணையாக இருப்பார் என்று சொன்னார். அதே போல், சசிகலா திரும்பி வந்தால் அவரை சேர்ப்பது குறித்து அதிமுக நிர்வாகக் குழு முடிவெடுக்கும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். இதற்கு சசிகலா மீண்டும் அதிமுகவில் சேரவே மாட்டார் என்று டி.டி.வி.தினகரன் மறுப்பு தெரிவித்தார்.
இந்த நிலையில், பெங்களூரு சிறை வளாகத்தில் சுரிதார் அணிந்து சசிகலா நிற்பது போல் ஒரு போட்டோ தற்போது வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே சசிகலா நள்ளிரவில் சுரிதார் அணிந்து, சிறையை விட்டு வெளியே சென்றதாக நீண்ட நாட்களுக்கு முன்பு ஒரு சர்ச்சை ஏற்பட்டது. அது தொடர்பான சி.சி.டி.வி. காட்சிகளும் வெளியாயின. அது பற்றி விசாரணையும் நடந்து கர்நாடக அரசிடம் அறிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சசிகலாவின் போட்டோ மீண்டும் வெளியாகி இருப்பதில் ஏதோ உள்நோக்கம் இருக்கலாம் என்று பேசப்படுகிறது. மேலும், இந்த போட்டோ பழைய போட்டோவா அல்லது சமீபத்தில் எடுக்கப்பட்ட போட்டோவா என்ற சந்தேகங்களும் கிளப்பப்பட்டு வருகின்றன.

No comments