நாட்டை இரண்டாக்கிய வரதருடன் கோத்தா

சமஷ்டி ஆட்சி தொடர்பாக எவருடனும் கலந்துரையாடவில்லை என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற தேசிய இராணுவ சாசனத்தில் கையொப்பமிட்டு சமூகமயப்படுத்தும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘ஒருமித்த இலங்கை, சுயநிர்ணயம், பிராந்திய ஒருமைப்பாடு, மனித உரிமைகளை வலுப்படுத்தல் ஆகியனவே எனதும், நாட்டினதும் எதிர்கால பயணத்தின் நோக்கமாகும்.

இந்த விடயங்கள் தொடர்பாக எவருடனும் கலந்துரையாடவில்லை, இனிமேலும் கலந்துரையாட போவதில்லை.

என்னுடன் இணைந்துள்ளவர்கள் கோரும் சகலதையும் ஒருமித்த நாட்டுக்குள் நடைமுறைப்படுத்துவதாக எனது விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளேன். ஆகவே அதனை அவ்வாறு செய்வதற்கு நான் கடமைபட்டுள்ளேன்.

ஒருமித்த இலங்கையை ஏற்றுக்கொண்ட அனைவரும் இன்று என்னுடன் இணைந்துள்ளனர். ஆனால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவர்களுடன் சமஷ்டி முறைமை தொடர்பாக நான் பேசியதில்லை.

மஹிந்த ராஜபக்ஸவுக்கு ஒருமித்த இலங்கையை ஏற்றுக்கொள்ள முடியாது. வரதராஜ பெருமாள் என்பவரே நாட்டை இரண்டாக பிரித்து அதனை சுயதீனமான தனிநாடாக அறிவித்தார்.

அவ்வாறு மிக பெரிய தவறை இழைத்த வரதராஜ பெருமாளுடன் இன்று கைகோர்த்து செயற்படுபவர் யார்? அவர் எமது எதிர்தரப்பு வேட்பாளராவார். அவ்வாறானவர்களுடன் எதிர்தரப்பினர் இன்று பல உடன்படிக்கைகளை கைச்சாத்திட்டுள்ளனர்.

வரதராஜ பெருமாள் என்பவர் அவர்களுக்கு சிறந்தவர். எனவே அங்குதான் தேச துரோகம் தலை தூக்கியுள்ளது. அதுவே நாடு, இனம், சமயம், ஆகியவை காட்டிக்கொடுக்கப்படும் பிரதான இடமாகும்.

ஒருமித்த நாட்டுக்குள் நாட்டின் தனித்துவத்தை பாதுகாத்து, நாட்டுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் போதுமானளவு அதிகாரத்தை பகிர்ந்தளிக்க எதிர்பார்கின்றேன்.

எதிர்வரும் 16 ஆம் திகதி யார் நாட்டின் மேல் உண்மையான பக்தி கொண்டவர் என்பதை மக்கள் தீர்மானிப்பர் என்பது எனது எண்ணம்.

எந்தவித அரசியல் தலையீடும் அற்ற பாதுகாப்பு துறையின் ஊடாக சுயாதீனமிக்க கௌரவமிக்க முறையில் சேவையாற்ற கூடிய பின்புலத்தை ஏற்படுத்துவேன்.

இராணுவத்தினரை அவர்களது கடமைகள் தவிர்ந்து வேறு அரசியல் உள்ளிட்ட எந்த செயற்பாடுகளிலும் ஈடுபடுத்துவதை நிறுத்துவேன்.

ஆட்சேர்ப்பு, பதவியுயர்வு, வெளிநாட்டு சுற்றுலா, கல்வி, வெளிநாட்டு சேவை, நலன்புரி விடயங்கள் உள்ளிட்டவற்றில் தகுந்தவருக்கு உரிய இடத்தை வழங்குவேன்.

உயிர்நீத்த, அங்கவீனமுற்ற இராணுவத்தினருக்காகவும் அவர்களின் குடும்பங்களின் நலன்புரி விடயங்களுக்காகவும் இந்த தேசிய இராணுவ சாசனத்தை உரியவகையில் நடைமுறைபடுத்த நான் கடமைபட்டுள்ளேன்´ எனக் குறிப்பிட்டுள்ளார்.

No comments